எப்போது ஊரடங்கு குறித்த அறிவிப்பு வரும். தற்காலிகமாக சுழற்சி முறையில் திறந்த பள்ளிகளை எப்போது மூடுவார்கள். இந்த வைரஸ் எல்லாம் தன்னுடைய புதிய திரிபுகளை உருவாக்க ஏன் இத்தனை நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்கிறது. புதிது புதிதாக வைரஸ் வரும் போது தானே ஊரடங்கும், தொடர் விடுமுறையும் கிடைக்கும் இதெல்லாம் இன்றைய பள்ளி மாணவர்களின் ஆகப்பெரும் எதிர்பார்ப்பு.
போகிற போக்கில் எல்லா மாணவ, மாணவிகளையும் அப்படிச் சொல்லிவிட முடியாது என்பதால் அதில், விதி விலக்காக பள்ளி செல்வதற்கு ஆர்வமாகக் காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பொங்கல் கொண்டாட பண்ணை வீட்டுக்கு சென்ற முதலமைச்சரிடம் “அய்யா, எப்படியாவது 10th ஆல் பாஸ் போட்டு விட்டுருங்க” என்று கோரசாக கோரிக்கை வைப்பது மாணவர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2020ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை முழுவதுமாக பள்ளி மாணவர்களின் கல்வி ஏகபோகமாக பாதிக்கப்பட்டிருப்பதை நிச்சயம் மாணவர்களை விட பெற்றோர்களும், ஆசிரியர்களும் எண்ணி கவலையுற வேண்டும். ஆனால், நோய்த்தொற்று அச்சத்தால் அவர்களும் ஆன்லைன் வகுப்பு, தேர்வு என எல்லாவற்றுக்கும் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களை விட கல்லூரி மாணவர்களை உடனடியாக பாதிக்கும் இது போன்ற விஷயங்களை அவர்கள் போராட்டம் நடத்தி ஆதரிப்பது அவர்கள் மீதான கவலையை இன்னும் ஒரு மடங்கு கூட்டத்தான் செய்கிறது.
இது எதிர்காலத்தில் அவர்களின் உயர்கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மிக மோசமாக எதிரொலிக்கப் போகிறது என்ற அபாயம் அறியாமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் வேலைக்கான நேர்காணல் தொடங்கி தற்போது வேலை வரையுமே மெய்நிகர் உலகத்தில் தான் நடைபெறுகிறது என்ற போது ஆன்லைன் வகுப்பு, தேர்வு மட்டும் நேரடியாக எழுத வேண்டுமா என்ற கேள்விக்கு ஆதரவுக் குரல்களும் எழத்தான் செய்கின்றன.
2021ம் ஆண்டு இறுதிவாக்கில் வெளியான சில நிறுவனங்களின் ஆட்கள் தேவை விளம்பரங்கள் அந்த அபாயத்தை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கின்றன. கொரோனா காலத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று வெளிவந்த மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்பது தான் அந்த விளம்பரத்தின் ‘ஹை லைட் அறிவுரை’. அதற்கு அவர்கள் பயன்படுத்திய குறியீட்டுச் சொல் ‘கொரோனா பேட்ச்’.
இந்தியாவில் 2 ஆண்டுகளில் கொரோனா ஏற்படுத்தி உள்ள தாக்கம் பெரும்பாலான ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் கனவுகளை சிதைத்து விட்டதாகவும், தற்போதை ஏற்பட்டுள்ள இடைவெளி முறையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையை அடுத்த 10 ஆண்டுகளில் எதிரொலிக்கச் செய்யும் என்று கூறுகிறது அமெரிக்கவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.
2020 முதல் 2022ம் ஆண்டு வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்களையும் வரும் நாட்களில் இந்த அடைப்புக் குறிக்குள் தான் சுருக்கப் போகிறார்கள் என்றால் அது எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் ஒரே சேர இந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்களை அடியோடு ஒதுக்கி வைக்கும். அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெறும் காகிதமாக மட்டுமே கோப்புகளில் இடம்பெறும்.
இதில் மாணவர்கள் மீதோ, கல்வி நிறுவனங்கள் மீதோ எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. அதே நேரத்தில், பெருந்தொற்று காலத்தை உலகளாவி கையாளும் முறையை பின்பற்றிய அரசு அமைப்புகளும், சுகாதார நிறுவனங்களும் முறையான வழிகாட்டுதல்கள் முன்வைத்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
இந்த சூழலை கடந்து வருவதற்கு மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன ? குறிப்பிட்ட கால கட்டத்தில் பயின்ற மாணவர்களை நிறுவனங்களை எப்படி கையாள வேண்டும். திறன்வாய்ந்த பணியாட்களை (Skilled Labours) உருவாக்குவதிலும், பெறுவதில் ஏற்படப் போகும் சிக்கல்களை களைவது எப்படி ? இந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த நிபுணர்கள் தரும் பதில் என்ன பார்க்கலாம்.
கற்றலில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வு நிலை கடுமையான ஏற்றத்தாழ்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனற கூறுகிறார் நெடுஞ்செழியன். தற்போதைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட தொடங்கி விட்டது என்றும் இது வரும் காலங்கில் நாடு முழுவதும் கடுமையான சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்கிறார் உயர்கல்வி ஆலோசகரான நெடுஞ்செழியன்.

நெடுஞ்செழியன், உயர்கல்வி ஆலோசகர்
கற்றல் இடைவெளி மாணவர்கள் விரும்பிக் கேட்ட ஒன்று அல்ல. இது ஒரு இயற்கை பேரிடரை ஒத்த நிகழ்வு. உலகில் இது போன்றதொரு நீண்ட இடைவெளிக் காலம் இதற்கு முன்னர் இருந்தது இல்லை என்றாலும், சுமார் 145 நாடுகளில் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டே இருந்தது. 90 நாடுகளில் எந்த காரணம் கொண்டும் பள்ளிகள் மூடப்படவில்லை என்று கூறுகிறார் கல்வியாளர் கே.ஆர்.மாலதி.
‘கொரோனா பேட்ச்’ என மாணவர்களை முத்திரை குத்தி அவர்களை வேண்டாம் என்று கூறுவது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என்றும், தேர்தல் உள்ளிட்ட அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார் மாலதி.

மாலதி, கல்வியாளர்
சிறப்பு பயிற்சி உள்ளிட்டவற்றை நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்வது தான் இந்த நிலையை சரி செய்வதற்கான வழி என்றும் மாலதி கூறியுள்ளார். மேலும், நிறுவனங்கள் Internship போன்ற பயிற்சிகளை நடத்தி கொரோனா கால கட்டத்தில் பயின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாறாக இவர்களை தவிர்ப்பது முட்டாள்தனமான அணுகுமுறை என்றும் கூறுகிறார் கல்வியாளர் கே.ஆர்.மாலதி.
நேரடியாக நடந்து வந்த அனைத்து தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடவடிக்கைகள் அனைத்தும் மெய்நிகர் (Virtual) முறையில் நடைபெற்று வருவதாகவும், தற்போது நிறுவனங்களிடம் இருந்த பொறுப்புணர்வு தனி நபர்களிடம் வந்துள்ளதால் அதற்கு ஏற்றார் போல நிறுவனங்களின் உத்திகள் மாற்றி அமைக்கப்படுவதாகவும், இது காலச் சூழலுக்கு மாற்றி அமைக்கப்படுவதான் நிறுவனம், பணியாளர்கள் என அனைவருக்கும் உகந்தது என்று கூறுகிறார் மனித வள மேம்பாட்டு ஆலோசகர் அருண்குமார் தவே.
நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு திமுக அரசின் மெத்தனப்போக்கே காரணம் - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தனிப்பட்ட முறையில் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான சூழல் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது சமூகவலைதளங்கள் மூலமாக சான்றிதழ் படிப்புகள் இலவசமாகவே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அருண்குமார் தவே தெரிவிக்கிறார்.

அருண்குமார் தவே,
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்
இதன் மூலமாக மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டு கால மாணவர்களை ‘கொரோனா பேட்ச்’ என குறிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் கூறுகிறார் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் அருண்குமார் தவே.
முறையான வழிகாட்டுதலும், ஆலோசனையும் பெற்று ‘கொரோனா பேட்ச்’ என்ற அடையாளத்தை உடைத்தெறிந்து அனைத்து தளங்களில் கால் பதிப்பது தான் கடந்த கல்வி ஆண்டுகளில் வெளிவந்த மாணவர்களுக்கு முன்னிருக்கும் சவால்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.