தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம்: திணறும் பெற்றோர்கள் - புகார் தெரிவிப்பது எப்படி?

கோப்புப் படம்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் எழுகின்றன.

  • Share this:
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன. அதற்கு முன்னதாகவே, அதாவது மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என ஊரடங்கு தளர்வுகளில் அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டுவிட்டன. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், எங்கே இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், எவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறதோ, அவ்வளவையும் கட்டிவிடுகின்றனர். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் பெற்றோர்கள்தான் ஓரளவு புகார்களை வெளியில் சொல்கின்றனர்.

கல்விக் கட்டண வசூல் பின்னணி என்ன?

கொரோனா பெருந்தொற்று காலம் 2020 மார்ச்சில் தொடங்கியபோது மூடப்பட்ட பள்ளிகள், இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டே கட்டண வசூல் குறித்து புகார்கள் எழுந்தபோது, கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்ககூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது பள்ளிக் கல்வித் துறை. இதனை எதிர்த்து, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது எப்படி? பள்ளியை நடத்துவது எப்படி போன்ற கேள்விகளோடு நீதிமன்றத்திற்கு சென்றனர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர். கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தில் 75 சதவீதத்தை 25% என 3 தவணைகளாக வசூலிக்கக் கோரியது தமிழக அரசு. 50% கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றது பெற்றோர் மாணவர் சங்கம். நீதிமன்றமோ 40 சதவீதத்தை முதலிலும், பள்ளி திறந்த பின்னர் 35 சதவீதத்தையும் வசூலிக்க அனுமதித்தது. இந்த உத்தரவை பல பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார்கள் எழத்தான் செய்தன.

2021-22ல் என்ன நிலை?

கடந்தாண்டு சிக்கல் முடிவடைவதற்குள் அடுத்த கல்வியாண்டும் கொரோனா இரண்டாவது அலைக்கு இடையில் பிறந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு பெருந்தொற்று ஆட்டிப்படைத்த நிலையிலும், கட்டண வசூலுக்கான குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் பெற்றோர்களின் கைபேசிகளை நிறைத்துக் கொண்டிருந்தன. ஓரளவு தொற்று குறையத் தொடங்கியதும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நீதிமன்ற உத்தரவைத்தான் இந்தாண்டும் பின்பற்ற வேண்டும் எனக் கூறிச் சென்றார். அதற்கு முன்னதாகவே 100%-த்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகவும், முந்தைய ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்கள் புகார்களை முன்வைத்தனர். விளைவாக பள்ளிக் கல்வித் துறை தரப்பிலிருந்து சில சுற்றறிக்கைகள் மட்டுமே வெளியாகின. அதிலும் 75% கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும் என பொதுவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எத்தனை தவணைகள் எனக் கூறப்படவில்லை.

வெளிப்படைத்தன்மையில்லை

75% என்றால், 100% என்ன தொகை என்றே தெரியாதபோது தான் கட்டுவது 75% தான் என்பது தங்களுக்கு எப்படித் தெரியும் என பல பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா? முந்தைய ஆண்டின் கட்டணம் என்றாலும், அதனை பெற்றோர்கள் எப்படி அறிவது? பள்ளிகள் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும் என்பது அரசின் வலியுறுத்தலாக இருந்தாலும், அதனை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா? அது பள்ளிக் கல்வித் துறையால் கண்காணிக்கப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. பதில் கிடைக்காதது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் கிடைப்பதில்லைதான்.

யாரிடம் புகார் கூறுவது?

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், யாரிடம் புகார் கூறுவது என்பதே தெரியவில்லை என்கின்றனர் பெற்றோர்கள். அப்படியே தெரிந்த அறிந்தவர்களிடம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் கூறினாலும், மிஞ்சிப்போனால் ஒரு ரெய்ட் நடக்கும், அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்றவை புகார் தெரிவித்தவருக்கே தெரிவில்லை என்கின்றனர் பெற்றோர்கள். புகார் தெரிவித்தால் ஏதேனும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தானே பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வருவார்கள்? கட்டணம் வசூலிக்கத் துணியும் பள்ளி நிர்வாகங்களும் அச்சப்படுவர்?

தனியார் பள்ளிகளின் நிலை என்ன?

பெருந்தொற்றுக் காலத்தில் சிக்கல்களை சந்திக்கும் பலதரப்பட்டவர்களில் தனியார் பள்ளிகளும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி நிர்வாகங்களைவிட அதில் பணி புரியும் ஆசிரியர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கட்டணம் வசூலிக்க முடியாத சில தனியார் பள்ளிகள் இந்த பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்டிருக்கின்றன. சில தனியார் பள்ளிகள் பல ஆசிரியர்களை வேலையைவிட்டு நீக்கி இருக்கின்றன. ஊதியத்தை பாதியாக குறைத்திருக்கின்றன. உண்மையில் கட்டணம் வசூல் செய்யாமல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட பள்ளிகள் ஒரு புறமிருக்கின்றன. பாடம் எடுப்பது மட்டுமின்றி கட்டண வசூலிலும் ஆசிரியர்களை ஈடுபடச் செய்யும் சில தனியார் பள்ளிகள், ஆசிரியர்களின் வேலைப் பழுவை இருமடங்காக்கி, ஊதியத்தை பாதியாக்கி இருக்கின்றன. இதனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய ஆசிரியர் பணியை விடுத்து வேறு துறைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

கட்டண நிர்ணயக் குழுவை மேம்படுத்த வேண்டும். அதன் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் கட்டணம் இணையதளத்திலோ, வேறு வழிகளிலோ பெற்றோர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். பெற்றோர்களின் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். அங்கீகார ரத்து செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையோடு அந்த நடவடிக்கை நின்றுவிடக் கூடாது. கட்டண நிர்ணயம் என்பதும் தனியார் பள்ளிகளின் தரப்பு மட்டுமின்றி பெற்றோர்களின் கருத்துக்களுக்கு பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளி சரி இல்லை என்றால் அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டியதுதானே என்ற வேள்வி எழலாம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது நல்லதுதானே எனத் தோன்றலாம். ஆனால், அரசுப் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் நகர்வது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கட்டாயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
Published by:Karthick S
First published: