Home /News /education /

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

முன்னதாக, மத்திய ஆசிரியர் தகுதி சான்றிதழை தேர்வர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன்  விண்ணப்ப செயல்முறை இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

    16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் இத்தேர்வு கணினி வழியில் அமையும் என்றும் தெரிவித்தது.

    ஆனால், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடநெறி, தேர்வு மையங்கள், விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விரிவான விவரங்கள் இதுநாள் வரையில் வெளியிடப்படவில்லை. எனினும், இம்மாத இறுதிக்குள் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    எனவே, பெற்றோர் மற்றும் மாணவர்கள் ctet.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது  பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 

    2009ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது.

    எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

    இரண்டு கேள்வித்தாள்களிலும், தலா 150 வினாக்கள் இடம்பெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் முறை, மொழியறிவு, கணிதம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக இவை அமையும்.

    இதையும் வாசிக்கமருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மருத்துவக் கல்வி இயக்ககம்

    இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களையும் எழுத வேண்டும்.

    இதையும் வாசிக்க: மத்திய அரசு துறைகளில் இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு

    தகுதிச் சான்றிதழ்:

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, உத்தரவாதமல்ல. எனவே, தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் மீண்டும் மீண்டும் தேர்வெழுத அனுமதியளிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை சிபிஎஸ்சி நடத்தி வருகிறது.

    முன்னதாக, தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், கடந்தாண்டு ஜுன் மாதம் இந்த சான்றிதழை தேர்வர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதையும் வாசிக்க: நீட் தேர்வு 2022: உத்தேச விடைத் தொகுப்பு நாளை வெளியீடு?

    மேலும், ஏற்கனவே ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்று காலாவதியான சான்றிதழ்களை வைத்துள்ள ஆசிரியர்களுக்கும், இது பொருந்தும் என்பதால், இதற்கான உத்தரவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Govt teachers

    அடுத்த செய்தி