யுஜிசி நடைமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

யுஜிசியில் உள்ள நடைமுறைகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

யுஜிசி நடைமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
முதலமைச்சர் பழனிசாமி
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 9:24 AM IST
  • Share this:
தமிழகத்தில் பொறியியல் இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ மாணவர்களும் அரியர் இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்களும் பாஸ் என அண்மையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அணில் சஹாஸ்ர புதே தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர், நமது செய்தியாளர் கீதன், அணில் சஹாஸ்ர புதேவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது, அரியர் தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.அதேநேரம், மீண்டும் அரியர் தேர்வை நடத்த தயார் என தமிழக அரசு கூறவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்திருந்தார்.

இந்த சூழலில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யுஜிசியில் உள்ள நடைமுறைகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் திட்டமிட்டே சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே அரியர் தேர்ச்சி விவகாரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு அவசரமான ஒன்று என்பதே தற்போதைய தகவல்கள் காட்டுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.அரியர் தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் அதிருப்தியை மறுத்து உயர்க்கல்வித்துறை அமைச்சரும், மற்றவர்களும் முரண்பாடான கருத்துகளை கூறுவது அரசின் தெளிவில்லாத நிலையையே காட்டுவதாக கூறியுள்ள அவர், இத்தகைய செயல்களால் மாணவர்களின் எதிர்காலம் வதைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

மாணவர்களின் வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண வேண்டும் என்றும் அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading