Home /News /education /

தாமதமாகும் எம்.இ., எம்.டெக் கலந்தாய்வுகள்.. தவிக்கும் மாணவர்கள்

தாமதமாகும் எம்.இ., எம்.டெக் கலந்தாய்வுகள்.. தவிக்கும் மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

ஒரு பருவத்தேர்வே முடிவுற்றிருக்க வேண்டிய நேரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை என்பது, தங்களை குழப்படையச் செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு பல மாதங்களாக நடைபெறாததால், அதற்காக காத்திருக்கும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து முறையிட்டு வரும் மாணவர்கள் சந்தித்து வரும் சிக்கல் என்ன?

கலந்தாய்வு தாமதத்தின் பின்னணி

கடந்த மார்ச் 21ஆம் தேதி எம்.பி.ஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் (TANCET) தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு தேர்தல் பணிகள் தொடங்கியதால், கலந்தாய்வு நடைமுறை தொடக்கம் என்பது அப்படியே நீர்த்துப்போனது. பின்னர், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் விண்ணப்பப் பதிவுகளும் முடிந்து, அக்டோபர் 30ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

நிம்மதிப் பெருமூச்சுவிட்ட மாணவர்களுக்கு, 10.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து என்ற நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சித் தரக் காத்திருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு விசாரணையில், பிப்ரவரி 15ஆம் தேதிவரை 10.5% ஒதுக்கீட்டுடன் கலந்தாய்வுகளை நடத்தக்கூடாது என உத்தர்விட்டிருப்பது, இம்மாணவர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Also Read: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 21 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மாணவர்களின் கருத்து என்ன?

”முதுநிலை படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, தேர்வெழுதி காத்திருப்பவர்கள் உட்பட, இந்த தாமதத்தால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்” – என்று கவலையுறும் மாணவர் முகமது ஆஷிக், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்பதாக வேதனைப்படுகிறார்

ஒரு பருவத்தேர்வே முடிவுற்றிருக்க வேண்டிய நேரத்தில் மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை என்பது, தங்களை குழப்படையச் செய்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த சூழலிலும், zero academic year என அறிவிக்கப்படாது என கொரோனா காலத்தில் கவனமாக இருந்த கல்வித் துறை, இம்மாணவர்களுக்கு அத்தகைய சூழலை ஏற்படுத்தி வருகிறது.

”அண்ணா பல்கலைக்கழகத்தை (Anna University) தொடர்பு கொண்டால், அவர்களும் குழப்பத்தில் இருப்பதை உணர முடிகிறது” என்கிறார் மாணவர் அருண். ”8 மாதங்களாக காத்திருக்கிறோம். தற்காலிக தீர்வையாவது கண்டு, விரைவில் கலந்தாய்வை நடத்திட வேண்டும்” என ஆதங்கப்படுகிறார் மாணவர் ஸ்ரீவத்சன்.

Also Read: ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிப்பு வெளியீடு

கல்வியாளர்களின் கருத்து

இதற்கு மேலும் கலந்தாய்வை தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், உயர்கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் கல்வியாளர்கள். இது குறித்து பேசும்போது, “தற்போது நடைமுறையில் உள்ள நீதிமன்ற உத்தரவு என்னவோ, அதன்படி 10.5% ஒதுக்கீடு இல்லாமல் கலந்தாய்வை இந்தாண்டிற்கு மட்டுமாவது நடத்தலாம். புதிய இட ஒதுக்கீட்டுடன் கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றுதான் நீதிமன்றம் சொல்கிறதே தவிர, கலந்தாய்வே நடத்தப்படக் கூடாது என்று சொல்லவில்லை” என்கிறார் கல்வியாளர் மாறன்.

அரசு செய்ய வேண்டியது என்ன?

அரசின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகின்றனர். கலந்தாய்விற்காக பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமல்ல. வேளாண் படிப்புகள், கால்நடை மருத்துவம் உள்ளிட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களும் ஒரு கல்வியாண்டை வீணாக்குகிறோமே என்ற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே 2 கல்வியாண்டுகள் கொரோனா காரணமாக செயலற்றுப்போன நிலையில், இந்தக் கல்வியாண்டும் விணாகிறதே என ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர்களும், மாணவர்களும். எனவே, அரசு உடனடி தீர்வை எட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Anna University, Counseling, Engineering counselling, Students

அடுத்த செய்தி