பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் முதல் முறையாக வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் 2ம் ஆண்டில் (lateral entry ) முறையில் பொறியியல் படிப்பில் நேரடியாக சேர்க்கப்பட உள்ளனர்
பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளை தேர்வு செய்து முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் மருத்துவம்,கால்நடை,வேளாண் படிப்புகளில் இடம் கிடைத்து சென்றுவிடுவதால்அந்த மாணவர்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் அடுத்த 4 ஆண்டுகள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும். எனவே இனி வரும் ஆண்டுகளில் இடங்கள் வீணாவதை தடுக்கும் வகையில் முதலாம் ஆண்டில் சேராமல் காலியாக உள்ள பொறியியல் இடங்களில் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் 2 ம் ஆண்டில் நேரடியாக சேர அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்தமுறையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பொறியியல் படிப்பில் வரும் கல்வியாண்டு முதல் காலியாக உள்ள இடங்களில் பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்வதற்கான அனுமதி பெறப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுவரை பாலிடெக்னிக் முடித்த மாணவர்களுக்கு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை நடத்தப்பட வில்லை.
முதல் முறையாக காலியிடங்களை நிரப்பும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேராததால் நான்கு ஆண்டுகள் காலியாக இருக்கும் இடங்கள் குறைக்கப்பட்டு தமிழக மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி ஆகியவற்றில் இதன் மூலம் மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10-12 வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்துங்கள்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் 2014-15 ம் ஆண்டில் 324 இடங்களும்,2015-16 ம் கல்வியாண்டில் 290இடங்களும், 2016-17 ம் கல்வியாண்டில்294 இடங்களும்
, 2017-18ம் கல்வியாண்டில்284 இடங்களும், 2018-19ம் கல்வியாண்டில் 175 இடங்களும், 2019-2020ம் கல்வியாண்டில் 389இடங்களும், 2020-2021 ம் கல்வியாண்டில் 570 இடங்களும் காலியாக இருந்தன. 2021-22 நடப்பு கல்வியாண்டில் 421 இடங்கள் காலியாக உள்ளது.
அரசின் இந்த முடிவால் முன்னணி தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர வேண்டிய நிலை இல்லாமல் முன்னணி அரசு பல்கலைக்கழகமான அண்ணா பல்கலையில் மாணவர்கள் சேர வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவர்.
மேலும் படிங்க: தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.