அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்பப்பெறப்பட்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கிய கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தொலைத்து விட்டாலோ, சேதமடைந்தாலோ, மாற்று சான்றிதழ் பெற கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக நியூஸ்18 செய்தி வெளியிட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றது. இனி பழைய கட்டணமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும், பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்தாண்டு, இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபாா்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணத்தின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 சதவீதம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை அண்ணா பல்கலைக்கழகம் விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கும், பல்வேறு அரிசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.