நூற்றாண்டுகள் கடந்தும் கணிதவியலாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் "கணித மேதை ராமானுஜன்"!

ராமனுஜன்

உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்களுக்கு ஒரு உத்வேகமாக இன்றும் திகழ்கிறார் சீனிவாச ஐயங்கார் ராமானுஜன்.

  • Share this:
தமிழகத்தின் ஈரோட்டில் பிறந்து இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் கோட்டையான இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம் தொட்டு அனைவரையும் வியக்க வைத்த சாதனை தமிழர் கணித மேதை ராமானுஜன் . இந்த உலகை விட்டு மறைந்து நூறாண்டுகள் கடந்தும் உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்களுக்கு ஒரு உத்வேகமாக இன்றும் திகழ்கிறார் சீனிவாச ஐயங்கார் ராமானுஜன். ராமானுஜனின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார் - கோமளத்தம்மா தம்பதிக்கு மகனை பிறந்தார் ராமானுஜன். குடும்ப சூழல் காரணமாக இவர்களின் குடும்பம் ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு இடம் பெயர்ந்தது. கும்பகோணத்தில் ராமானுஜன் வளர்ந்த வீடு தற்போது அவரது நினைவாக ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. இவரது தந்தை குமாஸ்தாவாகவும், தாயார் இல்லத்தரசியாகவும் இருந்தனர். சிறு வயது முதலே கணிதத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் ராமானுஜன். பள்ளியில் சேர்ந்து படித்தாலும் வகுப்பறையில் இவர் அதிகம் இருக்க மாட்டார்.

கோவில் மண்டபங்கள் உள்ளிட்டவற்றின் சுவற்றில் சாக்பீஸ்களை பயன்படுத்தி சிக்கலான கணக்குகளை போட்டு அதற்கு யார் உதவியும் இன்றி அவரே விடை கண்டுபிடிப்பார். விழித்திருக்கும் போது விடை கிடைக்காத பல கணக்குகளுக்கு தூக்கத்தில் கனவில் விடை கண்டுபிடித்து கணிதத்தின் மேல் தனக்கிருந்த பெருங்காதலை மெய்ப்பித்தார். குழந்தை பருவத்தில் மேம்பட்ட கணித அறிவாற்றலை வெளிகாட்டிய ராமானுஜன், தனது 13 வயதிலேயே தன் சொந்த அதிநவீன கோட்பாடுகளை (sophisticated theorems) பயன்படுத்த துவங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பள்ளி பருவத்திலேயே பட்டப்படிப்பு கணக்குகளுக்கு தீர்வு கண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

குடும்பம் வறுமையில் இருந்ததால் கணித தாகத்தை தீர்த்து கொள்ள பேப்பர் வாங்க காசில்லாத நிலை இருந்தது. எனினும் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு, அதன் முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதி வைத்து கொண்டார். 1909-ல் திருமணம் செய்து கொண்ட பின் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டி 20 ரூபாய் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். எனினும் நாள்தவறாமல் கணிதத்தை போட்டு பார்க்க தவறமாட்டார். இவரது கணித குறிப்புகள் மற்றும் சூத்திரங்கள் பின்னாளில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது.

இவரது பெர்நெவுவியன் எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆங்கிலேயர் ஒருவர் அனுப்பிய ராமானுஜனின் கணித சூத்திரங்கள் மற்றும் குறிப்புகளை பார்த்து அசந்தனர் பல்கலைக்கழக வல்லுநர்கள். தொடர்ந்து ராமானுஜனை இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தனர். இதனை அடுத்து 1914 மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுக்கு மத்தியில் தன் திறமையை நிரூபித்தார். உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி கணித உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து சாதனை தமிழராக வலம் வந்தார்.

ராமானுஜனின் கணித திறமையை பார்த்து வியந்து அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்து பெருமைப்படுத்தியது இங்கிலாந்து அரசு. பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பதவியும் அவருக்கு கிட்டியது. ‘lost notebook’ என அழைக்கப்படும் அவரது குறிப்பேடுகளில் ஒன்று டிரினிட்டி கல்லூரி நூலகத்தில் காணப்பட்டது, பின் அது ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி அறிஞர்களை வியக்க வைத்தார். இங்கிலாந்து சென்ற பின்னும் அவர் குல வழக்கப்படி கடைபிடித்து வந்த உணவுப் பழக்கத்தை மாற்றி கொள்ளாததால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. முதல் உலகப் போர் முடிந்ததும், அவர் 1919-ல் இந்தியா திரும்பினார். ஆனால் சில நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 1920 ஏப்ரல் 26 அன்று இறந்தார். 33 வயதை கடப்பதற்குள் ராமானுஜன் மன்னி விட்டு மறைந்தாலும் கணித மேதையாக அவர் பெற்ற புகழ் காலத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: