Exclusive | நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர் - ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் தகவல்

Youtube Video

பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களை விட நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்தவர்கள் எம்.பி.பிஎஸ் படிப்பில் குறைவான மதிப்பெண்களே பெறுகின்றனர்.

  • Share this:
இந்திய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வதற்கு தேசிய அளவில் நீட் என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். எய்ம்ஸ் உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு அதிலிருந்து விலக்கு உண்டு. 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வில் நடைமுறையில் இருந்துவருகிறது.

இருப்பினும், தமிழ்நாட்டுக்கு 2016-ம் ஆண்டுவரை நீட் தேர்வில் விலக்கு இருந்தது. தமிழ்நாட்டிலும் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அமலில் இருந்துவருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பிவருகின்றன. 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த அனிதா என்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை. அதனால், அவர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கொந்தளிப்பு எழுந்தது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது தி.மு.கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இந்தநிலையில், மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டது. நீட் தேர்வின் ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிய அமைக்கப்பட்ட நீதிபதி ராஜன் குழு உறுப்பினர் ஜவஹர் நேசன் நியூஸ்18க்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களை விட நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்தவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் குறைவான மதிப்பெண்களே பெறுகின்றனர்.

ஒன்றாம் ஆண்டில் இரு பிரிவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டாம் ஆண்டு முதல் சுயமாக சிந்திக்க வேண்டிய சூழலில் மதிப்பெண் குறைகிறது. நீட் தேர்வுக்கு முன் எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்தவர்கள் 70% அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். நீட் தேர்வுக்கு பின் எம்.பி.பி.எஸ் படித்து முடித்தவர்களில் 70% தனியார் மருத்துவமனைகளில் சேர்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 400க்கும் மேற்பட்ட தனியார் பயிற்சி மையங்கள் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. ஒரு மாணவர் சராசரியாக ஆண்டுக்கு 1.2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70% மதிப்பெண்கள் மட்டுமே பெறுவது ஏன்?’ என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
Published by:Karthick S
First published: