EXCLUSIVE : நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வசூலிக்கின்றன - ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் விளக்கம்

Youtube Video

நீட் தேர்வின் காரணமாக பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் வசூலிக்கின்றன என்று ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நீட் தேர்வின் சமூகப் பொருளாதார தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் உறுப்பினர் கல்வியாளர் மற்றும் மைசூர் JSS அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஜவஹர் நேசன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களை விட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்தவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் குறைவான மதிப்பெண்களே பெறுகின்றனர். ஒன்றாம் ஆண்டில் இரு பிரிவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டாம் ஆண்டு முதல் சுயமாக சிந்திக்க வேண்டிய சூழலில் மதிப்பெண் குறைகிறது. சுயசிந்தனை,  முடிவெடுக்கும் திறன், அறிவியல் பூர்வமான சிந்தனை ஆகியவை வளர்வதற்கு வாய்ப்பை அளிக்கக் கூடியவை பள்ளிகள் மட்டுமே. பயிற்சி மையங்களில் அதற்கான சூழல் கிடையாது.

நீட் தேர்வு percentile முறையாகும். எனவே மொத்த மதிப்பெண்ணில் சுமார் 20% மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மருத்துவக் கல்விக்கு தேர்ச்சியடைகிறார்கள். அவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்விலும் 70% என்ற அளவிலே மதிப்பெண்கள் பெறுகின்றனர். நீட் தேர்வுக்கு முன் 12ம் வகுப்பில் 96% மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேர முடியும். எனவே நீட் தேர்வு எப்படி அறிவை எடை போட முடியும்?

நீட் தேர்வுக்கு முன் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் 70% அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். நீட் தேர்வுக்கு பின் முதுநிலை மருத்துவம் படித்து முடித்தவர்களில் 70% தனியார் மருத்துவமனைகளில் சேர்கின்றனர். நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் நகர்புறம், உயர் வகுப்பு, படித்த பெற்றோர்களின் பிள்ளைகளாக இருக்கின்றனர். அவர்களின் தேர்வு தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 400க்கும் மேற்பட்ட தனியார் பயிற்சி மையங்களில் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இது குறைந்தபட்ச மதிப்பீடு மட்டுமே. ஒரு மாணவர் சராசரியாக ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நீட் பயிற்சிக்கு செலவு செய்கிறார்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: