முகப்பு /செய்தி /கல்வி / 75வது சுதந்திர தின அமுத பெருவிழா : கல்வியில் இதுவரை கடந்து வந்த பாதை என்ன?

75வது சுதந்திர தின அமுத பெருவிழா : கல்வியில் இதுவரை கடந்து வந்த பாதை என்ன?

75வது ஆண்டு சுதந்திர பெரு விழா

75வது ஆண்டு சுதந்திர பெரு விழா

இன்றைய உலக அரசியலமைப்புகளில்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு உத்தியோகப் பணிகள், உயர்கல்விக்குரிய வாய்ப்பை அதிகம் பேசும் ஒரே அரசியலமைப்பாக இந்தியா உள்ளது.

  • Last Updated :

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சமத்துவத்தையும், சம சந்தர்ப்பத்தையும்  உள்ளடக்கிய கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்வியை மேற்தட்டு மக்களே பெருமளவு பயன்படுத்திக் கொண்டனர். காலனிதத்துவ பொருளாதார  சுரண்டல் கோட்பாடுகள், கிராம/ நகர ஏற்றத் தாழ்வுகள், சமூக படிநிலைகள், பால் சமத்துவமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு வழிவகுத்தன.

சுதந்திர இந்தியாவில் தான் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டது. மனிதவள அபிவிருத்தி கொண்டே நாட்டின் உற்பத்திச் செயல்பாடுகள் அமையத் தொடங்கின.  உதாரணமாக, 1950களில் 1 கோடி 92 லட்சம் பேர் 1 முதல் 5ம் வகுப்புகளிலும், 45 லட்சம் பேர் 5 முதல் 12ம் வகுப்புகளிலும் இருந்ததாக முதலாவது திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், தற்போதைய சமீபத்திய தரவுகளின் படி (UDISE+ 2020- 21), 1 முதல் 5ம் வகுப்புகளில் 6.4 கோடி மாணவர்களும், 5 முதல் 12ம் வகுப்புகளில்  வரையில் 6.8 கோடி மாணவர்களும் படித்து வருகின்றனர். இதே காலகட்டத்தில், உயர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 3.85 கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த 75 ஆண்டுகளில் தோராயமாக ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்; அதற்கேற்ப வாரந்தோறும் ஒரு கல்வி நிறுவனம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கல்வியை முன்னெடுப்பதற்குரிய பல்வேறு தடைகள் நித்தம் நித்தம் உடைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வித்துறையில் சுதந்திர இந்தியாவின் துனிச்சலான, தன்னிச்சையான பயணத்தை இது காட்டுகிறது.

சமத்துவம், சம சந்தர்ப்பம்: சமவாய்ப்புகளை நோக்கி நாட்டின் கல்விமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதிலில் தான் இந்த அபரீதமான வளர்ச்சியை மதிப்பீடு செய்யமுடியும். இன்றைய உலக அரசியலமைப்புகளில்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு உத்தியோகப் பணிகள், உயர்கல்விக்குரிய வாய்ப்பை அதிகம் பேசும் ஒரே அரசியலமைப்பாக இந்தியா உள்ளது.

தொடக்கத்தில் பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர் பிரிவினர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு நலன்கள், தற்போது இதர பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என இட ஒதுக்கீடு நலன்கள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஓபிசி வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்துதல் (OBC Sub Categorisation), சாதி வாரிக் கணக்கெடுப்பு, உள் இடஒதுக்கீடு என விவாதங்களும் எழுந்துள்ளன.

உயர்கல்வி அணுகல் குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தாலும், 2010ம் ஆண்டு வெளியான Who Participates in Higher Education in India? என்ற ஆய்வுக் கட்டுரை (முனைவர் ராகேஷ் பசன்ட் -கீதாஞ்சலி சென்) பல்வேறு புரிதல்களை அளித்தது. முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது  உயர்கல்விக்கான அணுகல் குறித்த விரிவான விளக்கத்தை இக்கட்டுரை வழங்குகிறது.

படம் - 1

படம் 1ல்,  நாட்டின் 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயர்கல்வி வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி, இஸ்லாம் சிறுமான்பையினரின் பங்கேற்பு மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக, 2009-10ம் ஆண்டில், தோராயமாக 100 பேரில் எஸ்சி வகுப்பினரில் 9 பேர் மட்டுமே உயர்கல்விக்கான தகுதி பெற்றவர்களாக (அதாவது 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்) உள்ளனர். 17% மக்கள் அளவு கொண்ட எஸ்சி வகுப்பினரில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை வெறும்  8% ஆக உள்ளது. அதே, 100 பேரில் இந்து முற்பட்ட வகுப்பினர் 44 பேர் உயர்கல்விக்கான தகுதி பெற்றுள்ளனர். 23.2% மக்கள் அளவைக் கொண்ட இந்த வகுப்பினரில் பட்டப்படிப்பு முடித்தவர்களின் எண்ணிக்கை 50% ஆக உள்ளது. இது, முந்தைய காலங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கிறது.

இருப்பினும், சமகால உயர்கல்வி வாய்ப்பை மதிப்பிடும் விதமாக, தற்போது உயர்கல்வியில் படித்துக் கொண்டிருக்கும் 17-29 வயதுக்குட்பட்டவர்களின் விவரங்கள் தனியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 100 பேரில் எஸ்சி வகுப்பினர் 10.9 பேர் உயர்கல்விக்கான தகுதி பெற்றவர்களாக உள்ளனர். 18.6% மாணவர்கள்  அளவு கொண்ட எஸ்சி வகுப்பினரில்  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் எண்ணிக்கை 11.6% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 17-29 வயதுக்குட்பட்டவர்களுக்கான உயர்கல்வி தகுதியில் இந்து முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமான இடைவெளி  குறையத் தொடங்கியுளளது. தற்போது, 17-29 வயதுக்குட்பட்ட இஸ்லாமிய வகுப்பினரிலும் இந்த வளர்ச்சி போக்கு காணப்படுகிறது.

படம் - 2:

2009-10ம் ஆண்டில் உயர்கல்வியை முடித்த (Attainment) 22-35 வயதானவர்களுடன்,  அதே ஆண்டில் உயர்கல்வி பெற்று (Enrolment) வரும் 17-29 வயதுக்குட்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைவது காணப்படுகிறது.

இந்தியாவின் உயர்கல்வி வரலாற்றில்,பல்வேறு சமூகங்களின் பங்கு அதிகரித்து கொண்டு வருவது ஒரு சிறப்புப் பரிணாமமாக பார்க்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கல்வி உரிமைச் சட்டத்தை விரிவாக்க வேண்டும்: அடித்தட்டு மக்களை மேல் உயர்த்துவதில் உயர்கல்வி முக்கிய கருவியாக விளங்குகிறது. உயர்கல்வி மேற்படிப்பை மேற்கொள்வதற்கான சமூக இடைவெளி குறைந்து வருவதை மேற்படி தரவுகள் தெளிவுபடுத்துகின்றன (படம் 1 மற்றும் 2). இருப்பினும், எத்தனை மாணவர்கள் உயர்கல்விக்கான தகுதி பெருகின்றனர் (Eligible Population)என்ற கேள்வியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான (1 முதல் 8ம் வகுப்பு) அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை சட்டப்பூர்வமாக வழங்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் 2009 கொண்டு வரப்பட்டது. 2009ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது 12ம் வகுப்பு  முடித்திருக்க வேண்டும்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட  குழந்தைகளின் எண்ணிக்கை 20 கோடி ஆக உள்ளது. 2020-21ம் ஆண்டு 9 முதல் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3.9 கோடியாகவும், 11 முதல் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2.7 கோடியாகவும் உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 14 கோடி மாணவர்கள் பள்ளிக்கல்வியை  முடிக்கவில்லை. ஐடிஐ,    பாலிடெக்னிக் மற்றும் இதர சான்றிதழ் படிப்புகளின் எண்ணிக்கை 20- 30 லட்சம் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

தரவு: UDISE+ 2020-21

எனவே, பல கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான அடிப்படை தகுதிகளை பெறாமல் உள்ளனர். இதில், பெரும்பாலான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இதையும் வாசிக்க:   மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்: சாதக, பாதகங்கள் என்ன?

குறிப்பாக 14 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும்  முதலாளித்துவ சுரண்டல்கள், சாதிய தீண்டல்கள், வர்க்க பேதனைகள் போன்றவைகளால் வாழ்க்கை பயணத்தை மாற்றத் தொடங்குவதாக பல்வேறு தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

நாட்டின் அடுத்த மருத்துவர் யார் என்ற கேள்விக்கு நுழைவுத் தேர்வைத் தாண்டி சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பதில் தேட வேண்டும் என்ற பொதுக் கருத்தாக்கம்  சமூக மட்டத்தில் காணப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள், " 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியில் நாம் வெற்றி பெற்றால் தான் கல்வியின் சுதந்திரத்தை முழுமையாக நம்மால் உணர முடியும் என்றும், கட்டாயக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் 12ம் வகுப்பு வரை சட்டப்பூர்வமாக வழங்கும் வகையில் சட்ட முன்னெடுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

top videos

    மேலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான உயர்கல்வியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி முதலீடு படிப்படியாக அதிகரிக்க வேண்டும்" என்றும் கூறுகின்றனர்.

    First published:

    Tags: Independence day