தமிழ்கத்தில் அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களிலும் 69% இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முன்னதாக,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி படிப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை அந்த பல்கலைக்கழகம் பின்வாங்கியது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " மாநிலத்தில் செயல்படும் அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களிலும் 69% இடஒதுக்கீடு முறை தான் பின்பற்றப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் பாடநெறிகளுக்கும் மாநில அரசின் இடஒதுக்கீடு முறையே பின்பற்ற வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தெரிவிக்கப்பட்டது. 10% இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவும் திரும்பப் பெற பட்டுவிட்டது.
இதையும் வாசிக்க: ராணுவத்தில் ஒப்பந்த முறை... அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது மத்திய மரசு
எனவே, தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், அரசுக் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்திலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இது குறித்து, உயர்க்கல்வித் துறை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு
கடந்தாண்டு, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் பயாலஜி ஆகிய இரண்டு முதுநிலைபாடநெறிகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தது. இதனை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்'' பல்கலைக்கழகத்தின் செயல் தேவையற்ற குழப்பங்களை விளைவிப்பதாக உள்ளது. மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது'' என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
முன்னதாக, இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், "மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு தான் நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், காமராசர் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு மட்டும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதாக அறிவித்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விளக்கம் எந்தவகையிலும் ஏற்க முடியாததாகும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு காமராசர் பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளுக்கும் 69% இட ஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் இது போன்ற இட ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அவற்றையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.'' என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.