25000 THOUSANDS OF STUDENTS WILL APPLY FOR NEET TRAINING THIS YEAR VAI
அரசு நீட் பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பு.. காரணம் என்ன?
மருத்துவ கல்லூரி மாணவர்கள் (கோப்பு)
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு தரும் நீட் பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 8132 மாணவர்கள் அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐத் தாண்டியுள்ளது.
7.5% உள் இட ஒதுக்கீட்டால் கூடுதலாக 300 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியானதால், கடந்த வாரம் வரை 9000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மளமளவென இரட்டிப்பாக தற்போது உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நீட் பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 25,000-ஐ தொட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கான அரசு ஆன்லைன் பயிற்சி அடுத்த வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.