12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று
திருவண்ணாமலையில் வெளியான நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள்
சென்னையில் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உரிய விசாரணைக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி, வினாத்தாள்கள் தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடத்திற்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் செய்யாறு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் 12-ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாள் சென்னையில் வெளியாகி உள்ளது. கணிதம், அறிவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள் நேற்று வெளியான நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. திருப்புதல் தேர்வுகளை பொதுத் தேர்வுகள் போன்று நடத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வி உத்தரவிட்டு இருந்தது.
இதனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார் செய்யப்பட்டு மாணவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக இவை அளிக்கப்படும் நிலையில் வினாத்தாள்கள் தொடர்ந்து வெளியாவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.