கொடைக்கானலில் போதைக்காளான் தேடி காட்டிற்குள் சென்ற இளைஞர்கள் திரும்பி வர வழி தெரியாமல் 3 நாட்கள் காட்டிற்குள்ளே சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா தளமான கொடைக்கானலின் அடையாளமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக "போதைக் காளான்" என்ற ஒற்றை அடையாளமாக மாறி வருகிறது கொடைக்கானல். காடுகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை காளானை கொடைக்கானலில் போதைக் காளான் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
‘சிலோசைப்பின்’ என்கிற போதை தரும் வேதி பொருள் இவ்வகை காளான்களில் இருப்பதால் கறுப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்த போதைக் காளான். இந்த வகை காளான்களை சாப்பிட்டால் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை போதை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. போதைக் காளானின் தேவை அதிகரித்ததால் அதை காட்டுக்குள் சென்று சேகரிப்பவர்களும், விற்பவர்களும் கொடைக்கானலில் அதிகரித்துள்ளனர்.
போதை காளானை வாங்குவதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான கும்பல் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளாவை சேர்ந்த 5 இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். மேல்மலை கிராமமான பூண்டியில் உள்ள தங்கும் விடுதியில் அவர்கள் தங்கி இருந்தபோது, சிலர் அவர்களுக்கு போதை காளான்களை விற்பனை செய்துள்ளனர். அதை உட்கொண்ட இளைஞர்கள், போதைக் காளானை தேடி வனப்குதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
5 பேரில் இரண்டு இளைஞர்கள் மட்டும் போதை காளானை தேடி அடர்ந்த வனப்பதிக்கு சென்று, திரும்பி வரும் வழியை மறந்து விட்டனர். உடன் சென்றவர்கள் திரும்பி வந்த நிலையில் 2 நாட்கள் கடந்தும் காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அதைத் தொடர்ந்து நண்பர்கள் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் மற்றும் கேரளா போலீசார் இணைந்து அவர்களை வனப்பகுதிக்குள் சென்று தேடியுள்ளனர்.
இந்நிலையில் வன பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர்கள், இளைஞர்களை பார்த்து ஊருக்குள் அழைத்து வந்து கேரளா இளைஞர்களுக்கு உணவு, மற்றும் தண்ணீர் கொடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா இளைஞர்களுக்கு போதை காளான் விற்பனை செய்தது பூண்டி கிராமத்தை சேர்ந்த சசிகுமார், பாலையா, கோபால கிருஷ்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா, 100 கிராம் போதை காளான்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தொடர்ந்து போதை வஸ்துக்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கொடைக்கானல் "போதை காளான்" என்கிற ஒரு வார்த்தையில் சுருங்கி போவதை தடுத்தாக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Drug addiction, Kodaikanal, Mushroom