பழனியில் பூட்டியிருந்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து சுமார் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியில் லயன்ஸ் கிளப் 2வது குறுக்கு சாலையில், ஓய்வு பெற்ற மின்சார வாரிய அதிகாரி பாலசுப்ரமணியன் என்பவரது வீடு உள்ளது. இவரது மனைவி காமாட்சி. இவர் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் கணவன், மனைவி மட்டும் பழனியில் தனியாக வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வெளிநாடு செல்ல விசா பெறுவதற்காக நேற்று வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டு வாசலை சுத்தம் செய்ய வந்த வேலைக்கார பெண் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் மற்றும் இரும்புகேட் ஆகியவை உடைக்கப்பட்டு, ரத்தம் சிந்தியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கதினருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டனர்.
வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியுள்ளது தெரியவந்தது. மேலும் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் காலியான நகை அட்டைப் பெட்டிகள் கீழே வீசப்பட்டிருந்தன. விசாரணையில் சுமார் 20 பவுன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைரேகைகளை சேகரித்து, மோப்பநாய்களை வரவழைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Palani, Theft