முகப்பு /செய்தி /திண்டுக்கல் / இந்திய ராணுவத்துக்கு சொத்துக்களை தானமாக வழங்கும் முன்னாள் ராணுவ வீரர்..! யார் இவர்?

இந்திய ராணுவத்துக்கு சொத்துக்களை தானமாக வழங்கும் முன்னாள் ராணுவ வீரர்..! யார் இவர்?

முன்னாள் ராணுவ வீரர் இருதயசாமி

முன்னாள் ராணுவ வீரர் இருதயசாமி

Dindigul military man | தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால் தங்களின் மறைவுக்கு பிறகு இந்த சொத்துக்களை ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் - கேப்டன் இருதயசாமி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul | Dindigul | Tamil Nadu

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற 81 வயது முன்னாள் ராணுவ வீரர், தான் மறைந்த பிறகு, தனது சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.இருதயசாமி(81), இந்திய ராணுவம் மீது கொண்ட ஈர்ப்பால் 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். சீன-இந்தியா போர் (1962), இந்திய-பாகிஸ்தான் போர்களில் (1965) பங்கேற்ற இருதயசாமி, 1971-ல் வங்கதேச விடுதலைக்காக நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின்போது ஹவில்தாராகப் பங்கேற்றார்.

ராணுவத்தில் 32 ஆண்டுகள் சேவைபுரிந்த கேப்டன் இருதயசாமி, 1992-ல் ஓய்வு பெற்றார். பின்னர், திருச்சியில் தான் குடியிருந்த பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக 1996-ல் ரங்கநாதன் குடியிருப்போர் நலச் சங்கத்தை தொடங்கினார். சங்கத்தின் தலைவராக சுமார்18 ஆண்டுகள் பொறுப்புவகித்த அவர், அப்பகுதியின் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சிறுவயது முதல் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இருதயசாமி, 2014 முதல் முதியோர்களுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். 2020-ல் தேசிய அளவில் மணிப்பூரில் நடைபெற்ற முதியோர் தடகளப் போட்டியில் வெற்றிப்பெற்றார். மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் முதியோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப்.ஜெனரல் ஏ.அருணுக்கு அனுப்பிய கடிதத்தில், எனது வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.10 லட்சத்தை ராணுவத்துக்கு நன்கொடையாக அளிப்பதாகவும், தானும், தனது மனைவியும் மறைந்த பின்னர், தங்களது வீடு மற்றும் சொத்துகளை இந்திய ராணுவத்துக்கே கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய இருதய சாமி, இந்திய ராணுவம் எனக்கு செய்த உதவிக்கு, நன்றிக் கடனாகவே இதைப் பார்க்கிறேன். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எனவே,எனது சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். மேலும், எனது சேமிப்புத் தொகையை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குழந்தைகளின் கல்விக்கும், முதியோர் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த முடிவை நானும், என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்தோம்.  இளைஞர்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது. விளையாட்டில் கவனம்செலுத்த வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து, நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: Army man, Dindigul, Local News