முகப்பு /செய்தி /திண்டுக்கல் / சிறுமலையில் ஓராண்டு ஆகியும் திறக்கப்படாத வீடுகள்.. சாலையிலேயே வசிக்கும் பழங்குடி மக்கள்

சிறுமலையில் ஓராண்டு ஆகியும் திறக்கப்படாத வீடுகள்.. சாலையிலேயே வசிக்கும் பழங்குடி மக்கள்

திண்டுக்கல் - தொகுப்பு வீடுகள்

திண்டுக்கல் - தொகுப்பு வீடுகள்

Dindigul | திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் பளிகர் இன மக்களுக்காக  54 லட்சம் செலவில் கட்டப்பட்ட 18 தொகுப்பு வீடுகள் கட்டி முடித்து ஓராண்டு காலங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏ.சி உத்தரவு இல்லாததால்  திறக்கப்படாத சூழ்நிலையில் தொகுப்பு வீடுகள் முற்றிலும் சிதிலமடைவதற்குள் சீரமைத்து கொடுக்க பழிகர்  இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் பொன்னுருக்கி கிராமத்தில் பழங்குடி மக்களான பளியர்களுக்கு கட்டப்பட்டுள்ள 18 தொகுப்பு வீடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாத நிலை உள்ளது. இதனால் பழங்குடி மக்கள் மழை காலங்களில் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் பொன்னுருக்கி,  தாளக்கடை,  வேளாண்பண்ணை, தொழுகாடு ஆகிய குக்கிராமங்களில் 150 க்கும் மேற்பட்ட.  பளியர் சமூக பழங்குடி மக்கள் ஆண்டாண்டு காலங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அடர் வன பகுதியில் தேன்,  மூலிகை இலைகள்,  கடுக்காய்,  விளக்கமாறு,  பிரியாணியில் பயன்படுத்தப்படும் பாசிகள், ஆகியவைகளை சேகரித்து விற்பனை செய்தும், வாழை,  பலா, மிளகு, காப்பி, சௌசௌ போன்ற விவசாய விலை பொருட்கள் விளையும் தோட்டங்களில் விவசாய கூலிகளாகவும் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்கள் காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குகை மற்றும் மர பொந்துகளில் வாழ்ந்து வந்தனர். தற்பொழுது இவர்கள் தரையில் தகர குடிசை அமைத்தும்,  தார் பாய் கொண்ட குடிசையும்,  மின்சாரம்,  குடிநீர் சாலை வசதி இன்றி இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இவர்களை நகர்ப்பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கருப்புக்கோவில் அருகில் ரூ.3 லட்சம் வீதம் 54 லட்சம் மதிப்பீட்டில்  18 வீடுகளுக்கு நிதி ஒதுக்கி கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலமாகியும் திறக்கப்படாத காரணத்தினால்  பழங்குடியினர் மழைக்காலங்களில் தங்க இடமின்றி கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் வாசல்களில் சமைத்து உண்டு உறங்கி வருகிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் தரமற்ற கலவை கொண்டு கட்டப்பட்டதால் சுவர்களில் கை வைத்து தேய்த்தாலே உதிரும் நிலை உள்ளது. மேலும் கதவுகள் உடைந்தும், வீடுகள் முழுவதும் சிமிண்ட் காரைகள் பொறிந்து காணப்படுவதால் இந்த தொகுப்பு வீடுகள் தரமற்றும்,  முட்புதர்களாக செடி, கொடிகள் படர்ந்து சிதிலமடையும் நிலையில் உள்ளன.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த தொகுப்பு வீடுகளில் மின்சாரம்,  தண்ணீர்,  குடிநீர் வசதியின்றி உள்ளன. மழை பெய்தால் மழை நீர் வீட்டுக்குள் செல்லும் அளவிற்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே தங்களுக்காக அரசு ஒதுக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதற்குள் முறையாக தரமானதாக, புதுப்பித்து விரைவில் வழங்க வேண்டும்.  மேலும் தாளக்கடை வேளாண்பண்ணை.  தொழுகாடு,  பொன்னுருக்கி ஆகிய  பகுதிகளில் வாழும் மற்றவர்களுக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இப்பழங்குடி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, மாரியப்பன் பொன்னுருக்கி கிராமத்தை சேர்ந்தவர் கூருகையில், “ நாங்கள் இந்த சிறுமலையில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறோம். காட்டுக்குள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். காட்டுக்குள் பாம்பு பல்லி நடுவில்  தார்பாய்களை போட்டுக்கொண்டு பாறை குடவுகளிலும் மரத்தடியிலும் ரொம்ப காலமாக கஷ்டப்பட்டு வசித்து வந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு 35 குடும்பமாக வாழ்ந்து வந்தோம். இப்போது 100 குடும்பமாக பெருகி வந்துள்ளோம்.

காட்டுக்குள் கஷ்டப்பட்டு பாறை அமுக்கி எத்தனையோ குடும்பங்கள் இறந்துள்ளன. என் மனைவி கூட காட்டுக்குள் வரும் பொழுது மரம் மீது இடி விழுந்து அந்த மரம் அமுக்கி தான் இறந்தார். இது தொடர்பாக எங்களுக்கு வீடு வேண்டும் என்று அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்ட பிறகு 18 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 15 மாதத்திற்குள் கட்டி முடித்தனர். வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. வீடுகளை திறந்து வைக்க திறப்பு விழா நடத்த முதலமைச்சர் வருகிறார் என்று சொன்னார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

மேலும் படிக்க: திருச்சி காவேரி பாலம் 5 மாதங்களுக்கு மூடல் - போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

கட்டிய வீடு கிடைக்கவில்லை.  நாங்கள் மீண்டும் காட்டுக்குள் சென்று கஷ்டப்படாமலிருக்க இப்ப கட்டியிருக்கிற வீட்டு வாசலில் 4 குடும்பங்கள் வந்து தங்கியிருக்கிறோம். இன்னும் 14 குடும்பங்கள் வரணும். இன்னும் ஏராளமானவரகள் பாறை குடவுகளில் தார் பாய் போட்டுக்கொண்டு வசிக்கிறார்கள். வேளாண்பண்ணை, தாளக்கடை, பொன்னுருக்கி, தொழுவுக்காடு  ஆகிய பகுதிகளிலும் ஒவ்வொரு ஆதிவாசிக்குடும்பமும் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டுதானிருக்கிறார்கள். எங்களுக்கு தண்ணீர் வசதி வேண்டும். ரோடு வசதி செய்து தர வேண்டும். தரமான வீடு கட்டித்தர வேண்டும் என்று  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, BDO விடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  கேட்ட போது, ”சிறுமலை வனப்பகுதியில் பழங்குடியினருக்கு பதினெட்டு வீடுகள் கட்டி முடுக்கப்பட்டுள்ளது. அதற்கு திறப்பு விழா நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏ.சியிடம் தேதி கேட்க வேண்டும்” என்றார்.

Also see... பொங்கல் பண்டிகை: ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

அந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது என்று சொல்கிறார்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், “

இன்னும் சுற்றுச்சுவர் ( ரிட்டர்னிங் வால் ) கட்ட வேண்டியுள்ளது. மலைவாழ் மக்கள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி கேட்டு உள்ளோம். அந்த நிதி வந்திருக்கிறது. அது கட்டி முடித்தவுடன் திறப்பு விழா நடத்த வேண்டும்: என்றார்.

கட்டப்பட்ட வீடுகளில் சுவர்களின் பூச்சுகள் தரமில்லை. கையில் தேய்த்தாலே கலவை உதிருவதாக புகார் வந்துள்ளது என கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,  “அந்த புகாரை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

  செய்தியாளர்:இரா. சங்கர் , திண்டுக்கல் 

First published:

Tags: Dindigul, Home