திருப்பத்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் நந்தகுமார். எம்.பி.ஏ பட்டம் பெற்றதும், லட்சத்தை எட்டும் மாதச் சம்பளம், வலம் வர கார், வார இறுதி கொண்டாட்டங்கள் என சொகுசு வாழ்க்கையில் திளைத்திருந்தவர் அதை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை முழுநேரமாய் கையில் எடுத்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வடகவுஞ்சி கிராமத்தை தேர்ந்தெடுத்த நந்தகுமார், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து அதையே தனது முகவரியாக மாற்றிக் கொண்டுவிட்டார்.
இவர் மலைப்பகுதியில் விளையக்கூடிய மலைக் உருளைக்கிழங்கு, கேரட், மலைப்பூண்டு,மலை வாழை,கொத்த மல்லி உள்ளிட்டவற்றை ஆட்டு சாணம், மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு தனி ஒருவனாக இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார்.
இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ விவசாய தோட்டப்பகுதியின் நடுவே மலைகிராமத்தில் கிடைக்கக்கூடிய மூங்கில்,செம்மண் கொண்டு சிறிய குடில் அமைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் இந்த எம்பிஏ பட்டதாரி. குடில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் விளக்கு மாடங்கள் அமைத்து அகல்விளக்கு வெளிச்சத்தில் மின்சேமிப்பிலும் முன்னோடியாக திகழ்கிறார்.
மண் வீடு, அகல் விளக்கு, ஓவியங்கள் :
தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு மண் அடுப்பில் விறகு மூலம் தீ மூட்டி மண் பானையில் உணவு சமைத்து உட்கொண்டு வாழ்ந்து வரும் இவர், தனது குடில் முழுவதும் மூங்கில் கூடை, உலக்கை, மண் குவளை, சுரைக்குடுக்கை என இயற்கையான பொருட்களையே பயன்படுத்தி இயற்கை மனிதனாய் வாழ்ந்து வருகிறார்.
விளைவிக்கும் காய்கறிகளை மற்ற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறும் நந்தகுமார், இயற்கை விவசாயத்தில் சீரான விளைச்சல் கிடைப்பதாகவும், அதனால் நல்ல வருவாய் கிடைக்கப்பதாகவும் கூறுகிறார். இயற்கை முறைப்படி விவசாயம் செய்வதால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையினரை உருவாக்கலாம் எனக் கூறி இயற்கை விவசாயம் செய்ய மற்ற இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார் நந்தகுமார்.
படித்தோமா பட்டம் பெற்றோமா பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோமா அல்லது வெளிநாட்டுக்கு பறந்தோமா என்றில்லாமல், இயற்கை வாழ்க்கையை தேர்தெடுத்து, வாழ்ந்து வரும் நந்தகுமார் மற்ற படித்த இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையல்ல.
செய்தியாளர் : ஜாபர்சாதிக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.