Home /News /dindigul /

புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு... கலப்படம் காரணமாக சரியும் விலை... கவலையில் கொடைக்கானல் விவசாயிகள்...

புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு... கலப்படம் காரணமாக சரியும் விலை... கவலையில் கொடைக்கானல் விவசாயிகள்...

கொடைக்கானல் - மலைப்பூண்டு விவசாயம்

கொடைக்கானல் - மலைப்பூண்டு விவசாயம்

கொடைக்கானலில் அழியும் தருவாயில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் சந்தையில் அதன் விலை சரிவடைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றியுள்ள மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், பூண்டி, வில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட‌ கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், மலைப்பூண்டு உள்ளிட்ட முக்கிய மலைக்காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சுமார் 6000 ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவகுணம் வாய்ந்த மலைப்பூண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானல் பகுதியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசால் புவிசார் குறியீடு பெற்று தரப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒரு கிலோ மலைப்பூண்டு 40ரூபாய்க்கு விற்ற நிலையில் புவிசார் குறியீடு பெற்ற பின் மலைப்பூண்டு 1கிலோ ஒன்றிற்கு 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் சிலர் தரைப்பகுதியில் விளையும் பூண்டு மற்றும் சைனா பூண்டுகளை மலைப்பூண்டு போன்று நிறம் ஏற்றி  விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    இதனால் மலைப்பூண்டுக்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து மலைப்பூண்டு விவசாயிகள் தெரிவிக்கும் போது கொடைக்கானலில் சிலர் சைனா பூண்டுகளை மலைப்பூண்டுகள் என கூறி விற்பனை செய்து வரும் காரணத்தினாலும், கொடைக்கானல் பகுதியில் விளைவிக்கும் மலைப்பூண்டுக்கு சேமிப்பு கிட்டங்கு இல்லாத காரணத்தினால் கொடைக்கானலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் உள்ள பூண்டு சந்தைக்கு 100கிலோ மீட்டர் பயணித்து மலைப்பூண்டினை விற்பனை செய்யும் நிலையுள்ளது.

    அப்போது, கமிஷன் மண்டிதரார்கள் உரிய விலை கொடுக்காமல்  மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து மிக குறைந்த அள‌விலான‌ பணத்தினை மட்டும் மலைகிராம விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். இதனால் மலைப்பூண்டு விவசாயம் செய்து எடுப்பு கூலி, வேலையாள் கூலிக்கு கூட கட்டவில்லை என மலைகிராம விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    இதனை தமிழக அரசு கவனம் செலுத்தி கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைப்பூண்டு சேமிப்பு கிட்டங்கு மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து அழியும் தருவாயில் உள்ள மலைப்பூண்டினை  மீட்க முன் வர வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து அன்னை தெரசா உயிரி  தொழில் நுட்ப தலைவர் உஷா ராஜ நந்தினி கூறும் போது சில விவசாயிகள் மலைப்பூண்டு என்று கூறி கலப்படம் செய்து பூண்டுகளை விற்பதாகவும், 4 மாதத்தில் விளையக்கூடிய மலைப்பூண்டினை தவிர்த்து 3 மாதத்தில் விளையக்கூடிய பூண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை மலைப்பூண்டு என்று சிலர் விற்பனை செய்து  வருகின்றனர்.

    இதனால் மலைப்பூண்டின் விலையும் மவுசும் சந்தையில் குறைந்து வருகிறது. மலைப்பூண்டு விவசாயத்தை மீட்டெடுப்பதற்காக  அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பைஸ் போர்டு இணைந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலைப்பூண்டினை விவசாயம் செய்யும் மலைகிராம விவசாயிகளுக்கு பதிவு எண்ணுடன் மலைப்பூண்டு அச்சிடப்பட்ட அடையாள அட்டை வழங்க இருப்பதாகவும் மேலும் பயிற்சி பட்டறை வகுப்புகள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

    Also see... செஸ் ஒலிம்பியாட்:தர்பூசணியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உருவங்களை செதுக்கி அசத்திய சிற்பக் கலைஞர்

    இதன் காரணமாக மீண்டும் மலைப்பூண்டின் விலை அதிகரிக்கும் எனவும் மலைப்பகுதியில் மலைப்பூண்டினை விளைவிக்கும் மலைகிராம விவசாயிகளையும், மலைப்பூண்டினை ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து நேரிடையாக மலைப்பூண்டு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மலைப்பூண்டு என கூறி தரமற்ற பூண்டுகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது மலைக்கிராம விவசாய சங்கத்தினர் உதவியுடன் கடும்  நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Garlic, Kodaikanal

    அடுத்த செய்தி