திண்டுக்கல் மாவட்டம் மணலூர் ஊராட்சியில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் இந்த நீர்வீழ்ச்சி மிகவும் ஆபத்தான பாதுகாப்பு அற்ற நீர்வீழ்ச்சியாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தண்ணீர் விழும் இடத்திலிருந்து 100 அடிக்கு அப்பால் சுமார் 1200 அடி பள்ளத்தாக்கு உள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாக இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து செல்லும் இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பர் கல்யாண சுந்தரம் உடன் புல்லா வெளி நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அப்போது புகைப்படம் எடுத்து கொண்டு இருக்கும் பொழுது கால் தவறி அருவியில் விழுந்த அஜய் பாண்டி அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர், தாண்டிக்குடி காவல்துறையினர் என 30க்கும் மேற்பட்டோர் மாயமான அஜய் பாண்டியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மலைப்பகுதிகளில் பெய்த மழைப்பொழிவினையும் அருவிக்கு அதிகரித்த நீர் வரத்தையும் பொருட்படுத்தாது தேடும் பணி 6 நாட்களாக தீவிரமாக நடைபெற்றும் மாயமான வாலிபரை கண்டறியமுடியவில்லை. இதனை தொடர்ந்து 7 வது நாளான இன்று அதிகாலையில் பெய்த சாரல் மழையினை பொருட்படுத்தாது மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புல்லாவெளி அருவி ஆற்று ஓரப்பகுதியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் அஜய் பாண்டியனின் உடல் சடலமாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற் கூறு ஆய்வும் செய்யப்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் கூறும் பொழுது பாதுகாப்பு இல்லாத இந்த நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக ஆண்கள் பெண்கள் என விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
Also see... தருமபுரி அருகே ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் கிராம் மக்கள்
மாவட்ட நிர்வாகம் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருபவர்களின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இது போன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் இப்பகுதியில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு மழை பொழிவு இருப்பதால் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. இந்த நேரத்தில் சித்தரேவு வனத்துறை சோதனை சாவடி வழியாக நீர்வீழ்ச்சிக்கு வரும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ஜாபர்சாதிக், கொடைக்கானல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dead body, Kodaikanal, Photo