முகப்பு /செய்தி /தர்மபுரி / 9 மாதங்கள் முன் மாயமான +2 மாணவி... வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.. தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!

9 மாதங்கள் முன் மாயமான +2 மாணவி... வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.. தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!

இறந்த பெண்ணின் மண்டை ஓடு

இறந்த பெண்ணின் மண்டை ஓடு

காட்டுப்பகுதியில் ஒரு சடலம் எலும்புக்கூடாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dharmapuri, India

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் பாகங்கள் வனபகுதியில் எலும்புக் கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் கோயமுத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.

திருவிழாவின் போது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கோயமுத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

தன்னுடைய மகள் எங்கோ யாருடைய பாதுகாப்பிலோ உயிரோடுதான் இருக்கிறார் என எண்ணியிருந்தார் அவரது தந்தை. இந்நிலையில், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு சடலம் எலும்புக்கூடாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது உடல் பாகங்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒரு சில எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்தன. காணாமல் போன சிறுமியின் பெற்றோரை வரவழைத்த போலீசார் எலும்புக்கூட்டின் அருகில் கிடைத்த வாட்ச், கிழிந்து போன துணிகளைக் காட்டி அடையாளம் கேட்டனர்.

அவர்கள் அது தங்கள் மகளுடையதுதான் என கூறியதைடுத்து, உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால், சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த, 9 மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Dharmapuri, Girl students