Home /News /dharmapuri /

விலைச் சரிவால் சம்பங்கி மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்..

விலைச் சரிவால் சம்பங்கி மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்..

விலைச் சரிவால் சம்பங்கி மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்

விலைச் சரிவால் சம்பங்கி மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்

கட்டுப்படியாகாத விலையின்போதும் கூட செடிகளில் மலர் பறிப்பது, களையெடுப்பது, மருந்து தெளிப்பது போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

    விலைச் சரிவால் சம்பங்கி மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள், தருமபுரி மாவட்டத்தில் வாசனை திரவிய ஆலை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் விவசாயிகள் பலர் கணிசமான அளவில் சம்பங்கி மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பங்கி மலர்கள் ஆன்மீக தேவைகளுக்கும், சுப காரியங்களுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவைதவிர, வாசனை திரவிய ஆலைகளுக்கும் செல்கிறது. சம்பங்கி மலர்கள் விசேஷ நாட்களில் கிலோவுக்கு ரூ.200-ஐ கடந்தும் கூட விலை ஏற்றம் பெறும். ஆனால், சில தருணங்களில் விலை மிகவும் வீழ்ச்சி அடையும். அந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக சம்பங்கி மலருக்கான விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.10-க்கு விற்பனையாவதால் மலர் சாகுபடி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து, தருமபுரி அடுத்த சோகத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் கூறும்போது, ‘சம்பங்கி மலர்களை தனியார் வியாபாரிகளிடம் தான் விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ மலருக்கு ரூ.2 கமிஷன் பெறுவதை இந்த வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். கிலோவுக்கு ரூ.10 என விலை நிர்ணயம் ஆகும்போது எங்களுக்கு ரூ.8 தான் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி என பெரும் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு இந்த விலை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். விலை வீழ்ச்சி அடையும்போது சில நேரங்களில் விவசாயிகள் மலர்களை சாலையோரம் கொட்டிச் செல்வதும் உண்டு. சராசரியாக கிலோ ரூ.40-க்கு குறையாமல் விற்பனையானால் தான் விவசாயிகளின் நஷ்டம் தடுக்கப்படும்’ என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேபகுதி விவசாயி பாலு கூறும்போது, ‘விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்து வயலை பராமரிக்காமல் விட்டால் செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, மீண்டும் தேற்ற முடியாத நிலைக்கு சென்றுவிடும். எனவே, கட்டுப்படியாகாத விலையின்போதும் கூட செடிகளில் மலர் பறிப்பது, களையெடுப்பது, மருந்து தெளிப்பது போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம். மலர் வரத்து அதிகரிப்பு காரணமாகவே தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை ஒன்றை தருமபுரி மாவட்டத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும்’ என்றார்.

    செய்தியாளர் - ஆர்.சுகுமாா்,
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dharmapuri

    அடுத்த செய்தி