ஹோம் /நியூஸ் /தர்மபுரி /

வரதட்சணை கொடுமை.. வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பெண்.. கைக்குழந்தையுடன் 3 நாட்களாக பஸ் ஸ்டாண்டில் தவித்த சோகம்..!

வரதட்சணை கொடுமை.. வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பெண்.. கைக்குழந்தையுடன் 3 நாட்களாக பஸ் ஸ்டாண்டில் தவித்த சோகம்..!

பாதிக்கப்பட்ட பெண்

பாதிக்கப்பட்ட பெண்

Dharmapuri dowry torture | பேருந்து நிலையத்தில் இரு குழந்தைகளுடன் பசியால் தவித்து வந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri | Harur

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக குடியாத்தம் சென்றிருந்தார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பிரசாந்தின் தாய், தந்தை வரதட்சணை கேட்டு கீதாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதை தாங்க முடியாத கீதா 2 வருடங்களுக்கு முன்பு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், மாமியாரின் கொடுமை இரு மடங்காகி வரதட்சணையுடன் வா என கைக்குழந்தையுடன் கீதாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுது காலம் சென்ற பிறகு மீண்டும் பிரசாந்த் கீதா தம்பதியினர் பேசி முடிவு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் தற்போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், கீதாவின் மாமியார் மீண்டும் வரதட்சணை கேட்டு டார்ச்சரை  தொடங்கியுள்ளார். மேலும், வரதட்சணை கொடுத்தால் மட்டுமே உனது கணவருடன் வாழ முடியும் என சொல்லி  பிஞ்சு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மனம் நொந்த கீதா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கீதா பிஞ்சு குழந்தையுடன் பேருந்து நிலையத்திலேயே 3 நாட்களாக நிற்கதியாக தங்கியுள்ளார்.

பசியால் இரு குழந்தைகளும் வாடி வந்த கோலத்தை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அந்த பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் உணவு  கொடுத்து உதவினர். இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கீதா மற்றும் இரண்டு குழந்தைகளை  மீட்டு சென்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இதுபோன்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்காது என அந்த பெண் வேதனையுடன் தெரிவித்தார்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.

First published:

Tags: Crime News, Dharmapuri, Harur Constituency, Local News