இந்து மக்கள் கட்சி சார்பில் 75-வது சுதந்திர இந்தியாவின் பவள விழா வையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றுவோம், சுதந்திர போராட்ட நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்களை மற்றும் அவரது நினைவிடங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தருமபுரி அண்ணா சாகரத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சிவகாமி அம்மாவை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்களால் பாத பூஜை செய்து வணங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்,
" 75வது சுதந்திர இந்தியா பவள விழாவை பல்வேறு மாநிலங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு இந்த சுதந்திர இந்தியா பவள விழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கின்றேன். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றேன்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய, கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தவுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை முதலமைச்சரே ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனென்றால் அவர் மருத்துவமனையில் இருந்தாலும் கூட இங்கே வேலை நடைபெற வேண்டும் என்று தான் அவர் எண்ணுவார். மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கணினி உள்ளிட்டவற்றை முதலமைச்சருக்காக காத்திருக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறினார்.
மேலும், “ அதிமுக உட்கட்சி பிரச்சனையில் இரட்டை இலை மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து முடிவெடுத்து தான் எடப்பாடி பழனிசாமி என இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒரு அங்கமாக உள்ளது. உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருந்து வருகிறது. ஆனால் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு அரசு சீல் வைத்தது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம், ஒன்றரை கோடி கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த உட்கட்சி பூசல்களை அவர்களே சரி செய்து கொள்வார்கள். தமிழகத்தில் நிச்சயமாக அடுத்த ஆட்சியை அதிமுகதான் அமைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
அப்பொழுது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்காத என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர்,”
பாரதிய ஜனதாவும் ஆட்சி அமைக்கும். அதிமுகவும் ஆட்சி அமைக்கும். இரண்டும் கூட்டணிதான்” என தெரிவித்தார். அதற்கு கூட்டாட்சியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், ”யாராவது ஒருவர் கூட இருப்பார்கள் ஒருவர் ஆட்சி அமைப்பார்கள் இது தவறில்லை. ஆனால் கூட்டணி அரசு கிடையாது. அதிமுக ஆட்சி அமைத்தால் என்ன? பாஜக ஆட்சி அமைத்தால் என்ன இரண்டும் ஒன்றே தான்” என தெரிவித்தார்.
மேலும், “வருகிற 2026 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி, வளமான தமிழகம் தமிழகத்தில் மோடி ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நாளும் நமதே 40 நமதே” என்று கூறினார்.
சென்னையில் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெற உள்ளது இதற்காக தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இது நமக்கு பெருமையான ஒன்று. இந்த விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் சென்னையிலிருந்து சென்ற செஸ் வீரர் ஆனந்த் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். மேலும் பிரக்தியானந்தா என்ற சிறுவன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து பெருமை சேர்த்தவர். ஆனால் இந்த எந்த விளம்பரத்தையும் பிரக்தியானந்தா மற்றும் ஆனந்த் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை தர வேண்டும்” என்றார்.
Also see...ஓபிஎஸ் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து பேசியவர்,” ஒரு கோடி இந்துக்கள் திமுகவில் இருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முன்பு திமுகவின் கட்சித் தலைவராக இருந்தவர், உங்கள் கட்சியின் கொள்கை, இந்துக்களுக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்கள். தற்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சர், தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால்தான் நீங்கள் பொதுவானவர். இல்லை ரம்ஜான், பக்ரீத் பண்டிகைக்கு மட்டும் தான் வாழ்த்து சொல்வேன் என்று சொன்னால் நீங்கள் ஒரு தலைபட்சமானவர்” என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
செய்தியாளர்: ஆர்.சுகுமாா், தர்மபுரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arjun Sampath, Dharmapuri