என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம் என கடலூர் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவன விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது இரண்டு நாள் நடைபயணம் 7-ம் தேதி தொடங்கினார். வானதிராயபுரம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்துடன் இந்த நடை பயணம் தொடங்கியது.
இன்று நெய்வேலி அருகே வளையமாதேவி கிராமத்தில் இரண்டாவது நாள் நடைபயணத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என்.எல்.சி நிறுவனம் நமது மண்ணை எடுத்துக் கொண்டு, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கி வருவதாகவும், அந்நிறுவனம் கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து கோவை அன்னூரில் ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏன் நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அன்புமணி ராமதாஸின் இரண்டு நாள் பயணம், நெய்வேலி அருகே மும்முடிசோழன் கிராமத்தில் முடிவடைந்தது. அப்போது, கிராம மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
பின்னர் நிறைவுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம். என்எல்சி நிறுவனத்துக்காக நில எடுப்பு பணி தொடர்ந்தால், தங்களது போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்தார். பொன் விளையும் விவசாய நிலத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.
செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.