இந்தியாவில் மீண்டும் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது, அதிமுக பாஜகவின் அடிமையாகிவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்துக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், “ பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் மீண்டும் ஓர் இனக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது மிகப்பெரிய இனக் கலவரத்தை உருவாக்கினார்கள். இதில் 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் அந்த 2,000 பேரும் இஸ்லாமியர்கள் தான்.அதற்கு காரணம் யார் என்பது தெரியாமல் போய்விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள்.
நீதிமன்றங்களை பார்த்து கேள்வி கேட்கிறேன் அப்படி என்றால் அந்த இரண்டாயிரம் பேரை கொலை செய்தவர்கள் யார்? நம்முடைய நீதி பரிபாலனத்தில் அதுபோல் ஒரு நீதிமுறை கிடையாது.நாட்டினுடைய நலன் கருதி சாதாரண மக்களின் கேள்விகளுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். நம் நாட்டில் ஏறக்குறைய 35 கோடி சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள், 25 கோடி தலித்துகள் இருக்கிறார்கள் அவர்கள் இல்லாமல் இந்தியாவை ஆட்சி செய்துவிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அழகிரி, ஆனால் இன்று ஆளும் அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இறைவழிபாடு என்பது எப்படி சாத்தியமாகும். பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு தேசம்தான் இந்தியா. பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் முகமது நபியை விமர்சித்திருக்கிறார் அந்த மதத்தைச் சாராத ஒருவர் எப்படி விமர்சிக்கலாம். அப்படி விமர்சித்தால் கலவரம்தானே ஏற்படும்.
மக்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படத்தான் செய்யும், மக்கள் இதனால் பிளவுபட்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களது நோக்கமாக உள்ளது. மீண்டும் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. இது அவருடைய கருத்தாக இல்லை ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் கருத்து என்னவோ அதுவாகத் தான் உள்ளது.
ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் அக்கட்சியின் கருத்து குறித்து மட்டும்தான் தெரிவிக்க முடியும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனக் கலவரத்தை உருவாக்க நினைப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு இந்து கடவுள்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் மதநம்பிக்கை இல்லாத சிலர் தனி நபர்கள் இருந்திருக்கலாம், சில தலைவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இயக்கம் என்று பார்க்கிற போது எங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் இந்து மதத்தின் மீதான நம்பிக்கையும் உள்ளது நாங்கள் இந்துக்கள்.
எந்த ஒரு கடவுளையும் தவறாக பேசுகிறவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனவே சிதம்பரம் நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை கண்டித்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி போராடும். யாரும் அவர்களுடைய தனிப்பட்ட கருத்தை சொல்லலாம் ஆனால் விமர்சிக்க கூடாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிமுக-வானது பாஜகவின் அடிமை கட்சியாக மாறிவிட்டது. இதை நாங்கள் சொல்லியபோது அரசியலுக்காக பேசுகிறோம் என்றார்கள். ஆனால் தற்போது ஓபிஎஸ் நேரடியாக கூறியுள்ளார் பிரதமர் சொன்னதால்தான் நான் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என்று கூறியுள்ளார்.
Must Read : நரிக்குறவர் இனமக்கள் இருக்கையில் அமரக்கூடாது என்று யாரும் கூறவில்லை - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் விளக்கம்
அதிமுக-வில் யார் முதல்வர், துணை முதல்வர் என்பதையே பாஜக தான் தீர்மானிக்கிறது என்கிற போது அவர்களின் இழிநிலைக்கு வேறு என்ன காரணத்தை நாம் சொல்ல முடியும் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Chidambaram, Congress, Cuddalore, KS Alagiri