கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கண்டுபிடிக்க டெல்டா பிரிவு போலீசார் களமிறங்கினர். இந்நிலையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மாத்திரைகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி இன்று காலை 600 மாத்திரைகள் ஒரு பெட்டியில் வைத்து அந்த பகுதியில் உள்ள கொரியர் அலுவலகத்துக்கு வந்தது.
ஆனால் கொரியர் வந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதையடுத்து கொரியரில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு அவர்களை கொரியர் நிறுவனத்திற்கு வரவழைத்தனர். அதன்படி அங்கு வந்த நபரை பிடித்து விசாரித்தபோது இந்த மாத்திரை நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்பது தெரியவந்தது. பொதுவாக இந்த மாத்திரை நீரிழிவு நோயாளிகளில் நரம்பு பாதிப்பு காரணமாக ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்க நீரிழிவு நோயாளிகளுக்கு வலி நிவாரணையாக செயல்படுகிறது.
இந்த மாத்திரையை தண்ணீரில் கலந்து அதனை உடலுக்குள் செலுத்திக்கொண்டால் போதை ஏற்படுவதால் இதனை போதை மாத்திரையாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த 10 மாத்திரை 300 ரூபாய் முதல் 350 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் இவர்கள் 2 மாத்திரைகளை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கொரியர் மூலம் இந்த மாத்திரையை ஹைதராபாத்தில் இருந்து வரவைத்த கவியரசன்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவருக்கு உதவியாக இந்த மாத்திரைகளை விற்று வந்த ராகுல் என்பவர் தப்பி ஓடிவிட்டார். ராகுலை பிடிக்க தற்போது போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். மேலும் கடலூரின் எந்தெந்த பகுதிகளுக்கு இந்த மாத்திரைகள் விற்கப்பட்டது? யார் யாரிடம் விற்கப்பட்டது? என்று போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : பிரேம் ஆனந்த் - கடலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cuddalore, Local News