சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதால் ஒத்துழைக்க முடியாது எனவும், சட்டப்படி குழு அமைக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் தீட்திதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் விளங்குகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்களை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதனை சரி செய்வதற்கும் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய வர உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும், ஆய்வின்போது கடந்த 2014 முதல் கோவில் வரவு செலவு கணக்குகளை, சொத்துக்களின் விவரங்களை, பராமரிக்கப்படும் பதிவேடுகளை காண்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தனர். அதற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியிருந்தனர் . அதில் கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோவில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்களால் கட்டப்பட்டது எனவும் இது அனைவருக்கும் பொதுவான கோயில் என்பதால் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தலையீடு செய்ய முடியும். எனவே ஒருங்கிணைப்புக்குழு ஆய்விற்கு உறுதுணை அளிக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் விதவை கோலத்தில் பொங்கல் வைத்த சுமங்கலி பெண்கள்.. சேலத்தில் வினோத வழிபாடு
ஆய்வு தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துவரும் சூழலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, ஆய்வு தொடர்பாக இரு தரப்பினருக்கு சுமுகமான முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள் நடராஜ், லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் இன்று நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.
அவர்களுடன் ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் கோயிலுக்குள் வந்தார். அவர்களுக்கு பாதுகாப்பாக கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்பி அசோக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். கோயிலுக்கு வந்ததும் அதிகாரிகளை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கோயில் கனகசபை மீது அவர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்து வைத்தனர்.
மேலும் படிங்க: தமிழ்வழி இடஒதுக்கீட்டில் முறைகேடு: டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்கள் குற்றச்சாட்டு
இதையடுத்து தாங்கள் கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் அவர்களது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது, கோவில் நிலங்கள் தொடர்பாக நடராஜர் கோவிலுக்கு தனி வட்டாட்சியர் ஒருவரை நியமித்து அனைத்து சொத்து தொடர்பாக விவரங்களை அவர் பாதுகாத்து வருவதாகவும் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Hindu Temple