முகப்பு /செய்தி /கடலூர் / விவாகரத்து பிரச்னை.. கடலூரில் தீயில் கருகிய 5 பேர்.. கோபத்தால் அழிந்த குடும்பம்!

விவாகரத்து பிரச்னை.. கடலூரில் தீயில் கருகிய 5 பேர்.. கோபத்தால் அழிந்த குடும்பம்!

சம்பவம் நடந்த இடம்

சம்பவம் நடந்த இடம்

கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் சம்பவ இடத்திலேயே தமிழரசி மற்றும் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவி மீதான ஆத்திரத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேரை எரித்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ் - தமிழரசி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு சற்குரு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாதக் குழந்தை இருந்தது. சற்குருவுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் மதுபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வேறொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி தனது கைக்குழந்தை லட்சனுடன் அக்கா தமிழரசி வீட்டிற்கு சென்று விட்டார்.

சற்குரு தற்போது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த விவாகரத்து பத்திரத்தில் தனலட்சுமி கையெழுத்திட மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் சற்குரு. இந்நிலையில் புதன்கிழமை காலை அக்கா வீட்டிலிருந்த தனலட்சுமியைப் பார்க்க சற்குரு சென்றுள்ளார்.

அங்கு விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தி சண்டையிட்டுள்ளார். ஆனால் அதற்கு தனலட்சுமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேற தான் தயாராக எடுத்து வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்ட சற்குரு. பின் மனைவி தனலட்சுமி மீதும் ஊற்றினார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் அக்கா தமிழரசி, அம்மா செல்வி ஆகியோர் தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றியுள்ளார் சற்குரு. அருகில் அழுதபடி இருந்த குழந்தைகள் லட்சன் மற்றும் ஹாசினி ஆகியோர் மீது பெட்ரோல் பட்டுள்ளது. தலைக்கேறிய ஆத்திரத்தில் அனைவர் மீதும் தீவைத்த சற்குரு தன்னைத் தானேயும் கொளுத்திக் கொண்டார்.

இந்த கொடூர சம்பவத்தில் சற்குரு, மனைவி தனலட்சுமி, இவர்களது 9 மாத குழந்தை லட்சன், தனலட்சுமியின் அக்கா தமிழரசி அவருடைய, நான்கு மாத குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமி தாய் செல்வி ஆகியோர் தீப்பற்றி எரிய தொடங்கினர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குடும்பத்தோடு பற்றி எரிந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து போயினர். கதவை திறக்க முடியாததால் உடைக்க முற்பட்டனர். அதற்குள்ளாக அனைவரும் தீயில் கருகி விழுந்தனர். கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் சம்பவ இடத்திலேயே தமிழரசி மற்றும் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

சற்குரு மற்றும் செல்வி, தனலட்சுமி ஆகிய மூன்று பேரும் 90 சதவீத தீ காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குரு, தனலட்சுமி உயிரிழக்க உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.

தாய் செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத் தகராறில் பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் ஒட்டு மொத்த குடும்பதையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Burned, Crime News, Cuddalore, Self immolation