கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். இவர் பண்ருட்டியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். அத்துடன், வெளிநாடுகளுக்கு முந்திரியை ஏற்றுமதி, இறக்குமதியும் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக பண்ருட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 2010ம் ஆண்டு இந்த 3 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை வைத்து பண்ருட்டி உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தனது காயத்ரி முந்திரி நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த கடனுக்கு கடந்த 11 ஆண்டுகாலம் வட்டி செலுத்தாத நிலையில், வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகை ரூ.45 கோடியை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால் வங்கி நீதிமன்றத்தை நாடியது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் எம்.பி ரமேஷ் அடமானம் வைத்த 3 ஏக்கர் விவசாய நிலத்தை இன்று ஜப்தி செய்தனர். அங்கு இந்த இடம் வங்கிக்கு சொந்தமானது என எழுத்துப் பலகை வைக்கப்படுள்ளது. சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தனக்கு சொந்தமான இடங்களை பல வங்கிகளில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஜப்தி செய்ததால் அந்த இடத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வரும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
எம்.பி ரமேஷ் தங்களுக்கு 15 சென்ட் இடம் தருவதாக கூறியதன் பேரில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது வங்கி அதிகாரிகள் இடத்தை காலி செய்ய சொல்வதால் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்றும் எம்.பி தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.