கடலூரில் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த 7 பேரில், ஒரே நேரத்தில் நடைபெற்ற 5 பேரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுமிகள் மற்றும் 19 வயது இளம்பெண்கள் இருவர், நேற்று குளிக்க சென்றனர். அப்போது நீரில் மூழ்கி 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே, 7 பேரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. 2 இளம்பெண்கள் மற்றும் 3 சிறுமிகளின் உடல் ஏ.குச்சிபாளையத்தில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுமுறைக்கு ஏ.குச்சிபாளையத்திற்கு வந்திருந்த போது உயிரிழந்த, பிரியதர்ஷினி மற்றும் காவ்யா ஆகிய இரண்டு சிறுமிகளின் உடல் சொந்த ஊரான குறிஞ்சிபாடிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
இதை படிக்க:
பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதைதொடர்ந்து நடைபெற்ற ஏ.குச்சிபாளையத்தை சேர்ந்த உயிரிழந்த 5 பேரின் இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 5 பேரின் உடல்களையும் ஒரே குழியில் அடக்கம் செய்ததோடு, அங்கு நினைவுத்தூண் அமைக்கவும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.