சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என்றும் கோயிலைப் பாதுகாப்பதற்கு அரசின் தலையீடு அவசியம் எனவும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
தம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆய்வு செய்த தீருவோம் என அதிகாரிகளும் கோவிலுக்கு காத்து கிடக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தீட்சிதர்களுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து வெளியே நிறுத்தியுள்ளார்கள்.
நேற்று முன் தினம் அறநிலையத்துறை அமைச்சர், சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது அளித்த ஊடக பேட்டியில் ‘எல்லாம் சுமூகமாக நடக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக தீட்சிதர்களின் இன்றைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.
பாரம்பரியமான கலை பொக்கிஷங்களும், நீண்ட வரலாறும் உள்ள தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல, மக்களின் சொத்தே ஆகும். எனவே அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு. கோயில் பராமரிப்பும், கணக்கு வழக்குகளும் ஒழுங்காகத்தான் நடக்கிறது எனில் ஆய்வு செய்ய தடுப்பது ஏன் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு
தீட்சிதர்களின் இந்த மோசமான அணுகுமுறை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானதாகும். இப்போக்கினை அனுமதித்தால் கோயிலுக்கோ, கோயிலின் பாரம்பரிய சொத்துக்களுக்கோ எது நடந்தாலும், அரசாங்கம் தலையிட முடியாது என்ற ஆபத்தான நிலைமை உருவாகிடும். எனவே தமிழ்நாடு அரசாங்கம் தனது கடமையில் இருந்து பின் வாங்கிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.
மேலும், உத்திரப்பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொண்ட வழிமுறையை பின்பற்றி, ஒரு தனி சட்டம் இயற்றி, சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.