Home /News /cuddalore /

ஒரே பேருந்தில் ஏறிய 200 பயணிகள்... பேருந்தை ஓட்ட முடியாமல் வழியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டம்பிடித்த ஓட்டுநர்

ஒரே பேருந்தில் ஏறிய 200 பயணிகள்... பேருந்தை ஓட்ட முடியாமல் வழியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டம்பிடித்த ஓட்டுநர்

வழியில் நிறுத்தப்பட்ட பேருந்து

வழியில் நிறுத்தப்பட்ட பேருந்து

Chidambaram : 70 பேர் வரையில் பயணிக்க கூடிய அரசுப் பேருந்தில் 200 பேர் வரையில் ஏறியதால், பேருந்தை ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஓட்டம்பிடித்த சம்பவம் சிதம்பரத்தில் அரங்கேறியுள்ளது.

மாணிக்கம் திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவையை காட்சியை போன்ற நிலை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு மற்றும் கந்தகுமாரன் பகுதியில் இருந்து சிதம்பரத்திற்கு தினசரி நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மரந்தூர், ஓடாக்கநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, கிராம பொதுமக்கள், மாணவர்கள் இந்த பேருந்துகளில் தான் சிதம்பரம் செல்வது வழக்கம். இந்நிலையில், சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அடுத்தடுத்து பயணிகள் ஏற, காற்றே புகாத அளவிற்கு கூட்டம் நிரம்பியுள்ளது.

அதிகப்படியான சுமையால் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து ஆமை வேகத்தில் நகர, சலிப்படைந்த ஓட்டுநர் கண்ணங்குடியில் நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கியுள்ளார். சுமார் 200 பேர் பேருந்துக்குள் இருந்த நிலையில் இதற்கு மேல் இயக்க முடியாது என்று உயரதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.



அதனைத் தொடரந்து, ஓட்டுநர் சம்மந்தமே இல்லாததை போன்று ஓரமாய் போய் நிற்க, இப்ப பேருந்து நகருமா, நகராதா, ஓட்டுநர் வருவாரா, மாட்டாரா எனும் ஏக்கத்தில், காலை பணிக்கு செல்பவர்களும், மாணவர்களும் பேருந்துக்குள் புழுங்கியபடியும், வெளியே இறங்கி சாலையோரம் காற்று வாங்கியபடியும் காத்திருந்தனர்.

அரை மணி நேரமாகியும் பேருந்தை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதம்பரத்திற்கு, பலரும் பொடிநடையாகவே நடந்து சென்றனர். ஒரு சிலர் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து லிப்ட் கேட்டு பயணித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீதமிருந்த பயணிகள் பேருந்தை மெதுவாக உருட்டி சென்றாவது தங்களை சிதம்பரத்தில் இறக்கிவிடுமாறு கெஞ்சலாக கோரிக்கை வைக்க, மனமிறங்கிய ஓட்டுநர், சரி ஏறு, ஏறு என கூற காத்திருந்த கூட்டம் விறு, விறுவென மீண்டும் பேருந்தை நிரப்பியது.

அரசுப் பேருந்து


அப்போதும் போதிய இடமில்லாததால் பள்ளி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிகட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால் மீண்டும் ஒரு பக்கமாக சாய்ந்தபடி தள்ளாடிய பேருந்தை, ஓட்டுநர் லாவகமாக இயக்கி ஒரு வழியாக சிதம்பரம் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

Must Read : உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு

இந்நிலையில், கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாகவே, அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Bus, Chidambaram, Cuddalore, Govt Bus

அடுத்த செய்தி