ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு விநோத தண்டனை - ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை!

நாகினி நடனம் ஆடிய இளைஞர்கள்

ராஜஸ்தானில் பொதுவெளியில் ஊர் சுற்றிய இருவரை பிடித்த காவல்துறையினர் வித்தியாசமான தண்டனை கொடுத்தனர்

  • Share this:
ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றதாத இளைஞர்கள் இருவரை பிடித்த ராஜஸ்தான் காவல்துறையினர், அவர்களை நாகினி நடனம் ஆட வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் இருந்தாலும் ஒரு சிலர் அதன் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. வைரஸ் பரவலை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவதுடன், பொதுவெளியில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். ராஜஸ்தானில் அவ்வாறு பொதுவெளியில் ஊர் சுற்றிய இருவரை பிடித்த காவல்துறையினர் வித்தியாசமான தண்டனை கொடுத்தனர்.

ஜல்வார் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரணமின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அந்த வழியில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கிய காவல்துறையினர், வெளியே வந்ததற்கான காரணத்தை கேட்டனர். அவர்கள் எந்தவித காரணமும் இன்றி வெளியே சுற்றியதை உறுதி செய்த அவர்கள், இளைஞர்கள் இருவரையும் நாகினி நடனம் ஆட வைத்தனர். சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் அவர்கள் நாகினி நடனமாடியதை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தனர். பின்னர், ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றுமாறும், கொரோனா வைரஸின் வீரியம் குறித்தும் தெரிவித்து இளைஞர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். காவல்துறை பதிவு செய்த இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது.

இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முறையாக கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு காவல்துறையினர் விநோதமான தண்டனையை கொடுத்து வருகின்றனர். மத்தியப்பிரதேச மாநிலம், தெபால்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை தவளைபோல் குதிக்குமாறு தண்டனை கொடுத்தனர். இந்தூர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், ஊர் சுற்றுபவர்களை கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.தமிழகத்திலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு காவல்துறையினர் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். மன்னார்குடியில் ஊரடங்கு விதிகளை மீறிய பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் கொரோனா ஆபத்து குறித்து விளக்கம் கொடுத்து, அனுப்பி வைத்தார். நெல்லையில் ஊரடங்கு விதிகளை மீறிய இளைஞர்களை காவல்துறையினர் திருக்குறள் எழுத வைத்து அனுப்பினர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸின் 2வது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் உருமாற்றம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார மையமும் கவலை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு இடையே மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Arun
First published: