ஓடும் ரயிலை நம்பி ஓடிக்கொண்டிருந்த கண்பார்வையற்றோரின் வாழ்க்கை கடந்த ஐந்து மாதங்களாக முற்றிலும் முடங்கிப் போனது. தமிழகம் முழுக்க இதே போன்று ஆயிரக்கணக்கான கண் பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் மிகச்சரியாக தேர்வு செய்து 250 குடும்பத்தினரை அடையாளம் கண்டு பிடித்துள்ளார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற இளைஞர்.
ஐந்து மாதங்களாக இவர்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள், பண உதவி, ஆடை என தேவையான அனைத்தையும் கொடுத்து தன் குடும்பத்தினரை போல பாவித்து வருகிறார். மற்றவர்கள் யாரிடமும் கை நீட்டி பணம் வாங்காமல் தன் திருமணத்திற்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை இவர்களின் வாழ்வுக்காக செலவழித்துள்ளார் ஹரி.
இதுகுறித்து கண்பார்வையற்ற இவர்களிடம் பேசினால் கண் கலங்குகிறது ஒவ்வொருவரின் கண்ணீர் கதையும். ரயிலையும் ரயில் நிலையத்தையும் மட்டுமே நம்பி தாங்கள் வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர். கண் பார்வை இல்லை என்றாலும் யாரிடமும் கை நீட்டி யாசகம் கேட்பதில்லை. சின்னஞ்சிறு பொருட்களை ரயிலில் விற்று வாழ்க்கையைக் கழித்ததாக சொல்கின்றனர்.
வேர்க்கடலை, சோளம் காய்கறிகள், ரிமோட், செல்போன் கவர்கள் என சிறிய முதலீட்டில் பொருட்களை வாங்கி ரயிலில் விற்று தினமும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் ரயில்கள் இயக்கப்படாததால் ஒட்டுமொத்தமாக தங்கள் வாழ்வு நிலைகுலைந்து போனதாகவும் கூறுகின்றனர்.
இந்த நேரத்தில் தான் ஹரி இவர்களுக்கு கைகொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். மீண்டும் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும் சில மாதங்களுக்கு வியாபாரம் செய்ய அதிகாரிகள் தங்களுக்கு அனுமதி தரமாட்டார்கள். அப்படியே வியாபாரம் நடத்த வேண்டும் என்றாலும் குறைந்தது 2,000 ரூபாயாவது முதலீடு செய்ய வேண்டும், அதற்கு தங்களிடம் பணமில்லை என்கின்றனர்.
மேலும் படிக்க...சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை
எனவே கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு ஹரி போன்ற உள்ளங்களோ அல்லது அரசோ உதவி செய்தால் மட்டுமே வாழ்க்கைச் சக்கரம் மீண்டும் ஓடத்துவங்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai