ஹோம் /நியூஸ் /கொரோனா /

ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததற்கு பலன் உண்டா?

ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததற்கு பலன் உண்டா?

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு வகையில் கவலை தந்தாலும் இன்னொரு வகையில் இது நம்பிக்கை அளிக்கக் கூடியது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளில் பலன் கொடுத்ததில் இரண்டு முக்கியமானவை. ஒன்று முழு முடக்கம். இன்னொன்று பரிசோதனை, தொற்று பரவிய தடம் அறிதல், தனிமைப்படுத்தல். இதில் முழு முடக்கத்தில் வெற்றிகரமாக 40 நாட்களைக் கடந்துவிட்டோம்.

போதாது என்று அரசின் உத்தரவால் மேலும் 2 வாரங்களுக்கும் முடங்கிக் கிடக்கத் தயாராகிவிட்டோம். ஆனால் கொரோனா பரிசோதனையில் இந்த 40 நாட்களில் நாம் சொல்லிக் கொள்ளும் அளவில் முன்னேற்றம் அடையாமல் முழு முடக்கத்தை மட்டுமே நம்பி இருந்தது எந்த வகையில் பலன் தரப் போகிறது எனத் தெரியவில்லை.

கொரோனா பரிசோதனையின் தற்போதைய நிலை:

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில் மே 2 வரை வெறும் 37,776 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது பல நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலையில் நம் நாட்டிலோ இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையே (மே 2 கணக்குப்படி) 1,223 தான். ஆனால் இந்த புள்ளி விவரங்களை வைத்து நாம் சந்தோஷப்பட முடியாது என்பதுதான் உண்மை.

ஏனெனில் (மே 2 வரை) 9 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மட்டுமே நாம் கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். அதாவது சராசரியாக 10 லட்சம் பேரில் 708 பேருக்கே பரிசோதனை நடந்துள்ளது.

அமெரிக்கா, ஸ்பெயினை ஒப்பிடலாமா?

அமெரிக்காவில் 11 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயினில் தலா 2 லட்சத்தை கடந்துவிட்டது தொற்று பாதிப்பு. அந்த வகையில் நாம் பரவாயில்லை என்ற முடிவுக்கு இப்போதைக்கு வர முடியாது. கொரோனாவோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது நாம் பரிசோதனையில் மிக மிக பின்தங்கி நிற்கிறோம்.

ஆயிரங்களில் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா இதுவரை 67 லட்சம் பேரை பரிசோதித்துள்ளது. அதாவது சராசரியாக 10 லட்சம் பேரில் 20 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டு விட்டனர். இத்தாலியில் இந்த எண்ணிக்கை 33 ஆயிரமாகவும், ஸ்பெயினில் 32 ஆயிரமாகவும் உள்ளது. ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் வெறும் 708 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் இன்னும் அபாய கட்டத்தை பார்க்கவே இல்லையோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

தீவிர பரிசோதனையால் தப்பித்த தென்கொரியா:

மார்ச் ஒன்றாம் தேதி கணக்குப்படி தென்கொரியாவில் 3,736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது இந்தியாவில் வெறும் 3 பேருக்குதான் கொரோனா தொற்று. தென்கொரியா நாடு முழுவதும் முடக்கம் செய்வதை நம்பாமல் தீவிரமாக பரிசோதனை செய்வதை நம்பியது. அதன் விளைவாக இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ்தான் பாதிப்பின் அளவு உள்ளது.

தினந்தோறும் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும் 20க்கு கீழாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் அங்கே மடமடவென 6 லட்சத்து 30 ஆயிரம் பேரை பரிசோதித்து தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் நாம்தான் அவர்களை விட அதிகமாக ஏறக்குறைய 10 லட்சம் பேரை பரிசோதித்துவிட்டோமே என பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது.

ஏனெனில் அவர்கள் 5 கோடி பேர் கொண்ட சின்ன நாடு அது. நம் மக்கள் தொகை 130 கோடி என்பதை மறந்துவிட வேண்டாம். பரிசோதனையோடு நின்றுவிடவில்லை. ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரியவந்தால் அவரது செல்போன், கிரடிட் கார்டு விவரங்களை வைத்து அவர் கடைசி சில நாட்களில் எங்கெங்கெல்லாம் சென்று வந்தார் என்ற விவரங்களை அறிந்து அந்த பகுதிகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்தினார்கள்.

உங்கள் தெருவில் அல்லது பக்கத்து தெருவில் வசிப்பவருக்கு கொரோனா இருந்தால் உங்களது செல்போன் எண்ணுக்கு அலர்ட் செய்தி வரும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செல்போன் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேவந்தால் இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம். இப்படிப்பட்ட இடைவிடாத கடும் நடவடிக்கைகளால் தென்கொரியா இன்று கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் பல வழிமுறைகளை நாமும் பின்பற்றிக கொண்டிருந்தாலும் பரிசோதனை விஷயத்தில் நாம் இன்னும் முன் செல்ல வேண்டியுள்ளது.

இந்தியாவின் பரிசோதனை கட்டமைப்பு என்ன?

நாடு முழுவதும் 288 அரசு மையங்களிலும், 97 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதன் மூலம் தினமும் பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்க்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இப்போதுதான் ஒரு லட்சத்தை தொட உள்ளது.

ஆனால் ஏப்ரல் தொடக்கத்திலேயே நம் இலக்காக இருந்தது தினமும் ஒரு லட்சம் பேரை பரிசோதிப்பதுதான். பல இடங்களில் முழு முடக்க விதிமுறைகளை தளர்த்தியிருக்கும் இப்போதுதான் அந்த இலக்கையே அடையப் போகிறோம். இடையில் உடனடி பரிசோதனை முடிவுகளை தரும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை நம்பி பல நாட்களை வீணடித்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கொரோனா தொற்று உள்ளவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என்ற வகையில்தான் நம் பரிசோதனைகள் அமைகின்றன. அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பரிசோதனை செய்யப்படுவதில்லை. அப்படி வந்த சிலருக்கு பரிசோதனை நடந்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தில் இருந்தவரை அது பற்றி அதிகாரிகள் வெளிப்படையாக பேசினார்கள். (புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டால் அது பக்கத்தில் வசித்த வெளிநாட்டில் இருந்து வந்தவர் அல்லது கொரோனா தொற்று உள்ளவரின் மூலம் வந்திருப்பதை எளிதாக கண்டுபிடித்துவிடும் நிலையே இரண்டாம் நிலை).

ஆனால், தற்போது யார் மூலமாக கொரோனா பரவியது என அறிய முடியாத 3ஆம் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இப்படிப்பட்ட புதிய தொற்றுடையவர்கள் ஏராளமானோர் கண்டறியப்பட்டு வருகின்றனர். மூன்றாம் கட்டமான இந்த சமூகப் பரவலைப் பற்றி அதிகாரிகள் மூச்சுவிட மறுக்கிறார்கள்.

நிம்மதி தரும் தகவல் என்ன?

இதில் ஒரே ஆறுதலான விஷயம் பரிசோதனை செய்யப்படுபவர்களில் பாதிக்கப்படுபவர்களின் சதவிகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக இருப்பதுதான். அதாவது 100 பேரை பரிசோதித்தால் வெறும் 4 பேருக்குதான் கொரோனா கண்டறியப்படுகிறது. இதுவே அமெரிக்காவில் 17ஆகவும், பிரிட்டனில் 21 ஆகவும் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சதவிகிதமும் நமக்கு நிம்மதியைத் தருவதாகவே உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 100க்கு 3 பேரை இறக்கின்றனர். ஆனால் இத்தாலி, பிரிட்டன், பிரான்சில் இந்த சதவிகிதம் 13 ஆக இருக்கிறது.

நம்பிக்கை தரும் தமிழகம்:

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு வகையில் கவலை தந்தாலும் இன்னொரு வகையில் இது நம்பிக்கை அளிக்கக் கூடியது. ஏனெனில் அந்த அளவுக்கு அதிகமாக பரிசோதனைகளை நாம் செய்து வருகிறோம். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாதிரிகள் தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவுக்கு (மொத்தம் 1.51 லட்சம் மாதிரிகள் பரிசோதனை) அடுத்தபடியாக தமிழகம்தான் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளது. அதனால்தான் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாள்தோறும் 10 ஆயிரம் பேரை பரிசோதனை செய்யும் நிலையை எட்டப்போகிறோம். அதாவது நாடு தழுவிய அளவில் நடக்கும் பரிசோதனையில் ஏறக்குறைய 10 விழுக்காடு தமிழகத்தில்தான் இருக்கிறது.

நம் கையில் என்ன இருக்கிறது?

இந்த நேரத்தில் தினமும் 5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்தால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். நம்மிடம் அதற்கான கட்டமைப்பும், கருவிகளும் உள்ளதா என்பதே கேள்விக்குறிதான்.

மக்களை முடக்கி வைத்த இந்த 40 நாட்களில் பரிசோதனையில் நாம் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்க வேண்டும். அது நடக்காமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம்தான். ஊரடங்கை தளர்த்திய பின்னால் (அரசின் கையில் வேறு திட்டமுமில்லை) இனி என்னதான் லட்சங்களில் பரிசோதனைகள் செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்பதே கேள்விக்குறிதான்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: CoronaVirus, Lockdown