காவல்துறையினர், பாலியல் தொழில் செய்வோருக்கு ஒரு நாளைக்கு 7000 இலவச உணவு வழங்கும் பெண்!

காவல்துறையினர் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு உணவு கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்தே ஆகான்ஷா இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு உணவு கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்தே ஆகான்ஷா இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலையிழந்தவர்கள், ஆதரவற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையிழந்தவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலி பெருபவர்கள். தினமும் ஊதியம் கிடைத்தால்தான் அவர்கள் அன்றைய தினம் சாப்பிட முடியும். இப்படி இருக்க தன்னார்வலர்கள் பலரும் அவர்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.

அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஆகான்ஷா சடேகர் என்ற பெண் தினமும் இலவசமாக 7000 உணவு பார்சல்களை வழங்கி வருகிறார். அவருக்கு எப்படி இத்தகைய எண்ணம் வந்தது என்ற சுவாரஸ்யத் தகவலை ’தி பெட்டர் இந்தியா’ என்ற இதழுக்கு அவர் தெரிவித்துள்ளார். ஆகான்ஷாவின் சகோதரர் சோஹம், காஷிபாய் நாவலே மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பயிற்சி பெற்றுவருகிறார். அவருக்கு உணவு கிடைப்பது கடினமாக இருந்திருக்கிறது. இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது சகோதரருக்கு தினமும் உணவு சமைத்து அனுப்பியுள்ளார். சிறிது நாட்களிலேயே அவரது உணவு பிரபலமாகியது. அதனைத் தொடர்ந்து தினமும் 100 உணவுகள் வரை அளித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் தீவிரமெடுத்ததன் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியது. இதனையடுத்து ட்விட்டரில் ஒருவர், அரசின் கட்டுப்பாடுகளால் தனக்கு உணவு கிடைக்கவில்லை என்றும், ஆன்லைனில் கூட தன்னால் உணவு ஆர்டர் செய்து பெற முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு உணவு வழங்க முடிவு செய்து அவரிடம் கேட்டிருக்கிறார் ஆகான்ஷா. அதற்கு அந்த நபரும் சம்மதிக்க அவருக்கு உணவு வழங்கி வந்திருக்கிறார்.

அந்த ட்வீட் வைரலாகி, ஆகான்ஷாவிடம் தங்களுக்கும் உணவு வழங்குமாறு கோரிக்கைகள் குவியத் துவங்கியுள்ளன. ஆனால் ஆகான்ஷாவின் வீட்டு சமையலறை சிறியது என்பதால் அருகில் உள்ள உணவகங்களை அணுகியுள்ளார். அவை கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து ஒரு சில உணவகங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கிடைத்தததையடுத்து அதன்மூலம் மக்களுக்கு உணவு வழங்கத் தொடங்கியுள்ளார்.

அவர் மக்களுக்கு உணவு வழங்க செல்லும்போது போலீஸ் அவரை நிறுத்தி விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, அவர் உணவு வழங்குவதை அறிந்து காவல்துறையினர் சாலையோரம் வசிப்பவர்கள் உணவில்லாமல் சிரமம் அடைவதை ஆகான்ஷாவிற்கு சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், காவல்துறையினருக்கும் உணவு வழங்க முடிவு செய்திருக்கிறார். ஏனெனில், காவல்துறையினர் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு உணவு கிடைப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் தொழில் செய்வோரும் உணவில்லாமல் தவிப்பதை அறிந்து தினமும் 2500 உணவுகள் வரை அவர்களுக்கு வழங்கி வருகிறார். அவரும் அவரது தோழியும் சேர்ந்து புருஷோத்தம் மலதி ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை துவங்கி நன்கொடை பெற்று உதவ முடிவு செய்துள்ளனர். தற்போது அவர்களுக்கு ரூ. 15 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளதாம். இதன் காரணமாக இலவச உணவு வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
Published by:Archana R
First published: