ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் டெல்டா வேரியன்ட் பாதிக்குமா ?

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் டெல்டா வேரியன்ட் பாதிக்குமா ?

கொரோனா

கொரோனா

தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் போடாதவர்களுக்கான டெல்டா வேரியன்ட்டின் அபாயங்கள் என்ன?

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக அகலாத நிலையில் சில பகுதிகளில் குறைந்திருந்த தொற்று மீணடும் மெல்ல பரவ துவங்கியுள்ளது. எந்நேரமும் மூன்றாம் அலையின் தாக்கம் துவங்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகள் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் கேடயமாக கருதப்படுகிறது. எனவே தடுப்பூசி போட்டு கொள்ள மக்களிடையே ஆர்வம் பெருகி வருகிறது. எனினும் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் சிலர் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தடுப்பூசி போட்டு கொள்ள மறுப்பது உள்ளிட்டவற்றால் இன்னும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாமல் இருகின்றனர்.

இதனிடையே தடுப்பூசி போடாத ஒருவர் தனக்கு தொற்று எளிதில் பரவும் அபாயத்தை உண்டாக்கி கொள்வதோடு மட்டுமல்லாமல், பிறருக்கும் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்துகின்றார். உலக நாடுகளுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்க கூடிய டெல்டா வேரியன்ட் கொரோனா வைரஸ், பல தீவிர சிக்கல்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக கோவிட் தடுப்பூசிகள் திறம்பட செயல்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் தடுப்பூசி போடாத நபர்களுக்கு டெல்டா வேரியன்ட் மூலம் ஆபத்துகள் இரட்டிப்பாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது போன்ற சூழலில் ஒருவேளை நீங்கள் தடுப்பூசி போட்டிருந்து, தடுப்பூசி போட்டு கொள்ளாத ஒரு நபரை சந்திப்பது அல்லது முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அவர் அருகே இருக்க நேரிடுவது உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானது.? தடுப்பூசி போட்டு கொண்ட மற்றும் தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு டெல்டா வேரியன்ட் அபாயங்கள் எவ்வாறு ஒப்பிடபடுகின்றன என்பதை பார்க்கலாம்.

தொற்றின் இரண்டாம் அலை பல இடங்களில் வெகுவாக குறைந்து காணப்படும் நிலையில், குடும்பம், வேலை அல்லது பிற தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட, இன்னும் தொற்று அபாயம் நீடிப்பதால் தடுப்பூசி போடாத நபர் ஒருவரை வெளியே சந்திப்பது அல்லது அருகருகே நின்று பயணிப்பது ஆபத்தை ஏற்படுத்த கூடும். நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டு போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தாலும், உருமாறிய வைரஸ் காரணமாக தொற்று உங்களை பாதிக்காது என்பது உறுதி கிடையாது.

எனவே தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதே புத்திசாலித்தனம். டெல்டா வேரியன்ட்டின் அதிவேக பரவல் பல நாடுகளில் அடுத்த அலைகளின் எழுச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொள்ளாத ஒரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயமும் மற்றும் அவரால் பலருக்கு தொற்று பரவும் வாய்ப்பும் மிக அதிகம். அந்த நபர் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கூட தொற்றை பரப்பும் வாய்ப்பு அதிகம். எனினும் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அறிகுறி இல்லாமல் தொற்றை பரப்பும் கேரியர்களாக செயல்பட முடியுமா என்பதை அறிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவரை வைரஸ் தாக்கும் அபாயம் குறைவு என்றாலும், அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் வெளியே செல்லும் போது இரட்டை மாஸ்க் அணிந்து கொள்வது அவருக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாஸ்க் அணியமல் தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருக்கும் ஒருவரை சந்திப்பதை விட, சரியான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் ஒருவரை சந்திப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஒன்றாகும்.

தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்களுக்கான டெல்டா வேரியன்ட் அபாயங்கள்:

மிகவும் தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வேரியன்டாக டெல்டா இருக்கும் நிலையில், தடுப்பூசி போடாதவர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அதிகம் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2 டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டாலும் லேசான பாதிப்புடன் விரைவில் குணமாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. டெல்டா வேரியன்ட் பரவி வரும் நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை விட, முழுமையாக தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கான அபாயங்கள் மிக குறைவாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத நபரை சந்திக்கலாமா?

தடுப்பூசி போடுவதில் சிலருக்கு தயக்கம் நீடித்து வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ள இன்னும் அனுமதி கிடைக்காமல் இருக்கும் குழந்தை பிரிவினர் போன்றோர் பாதிக்கப்படும் அபாயங்கள் தொடர்கின்றன. எனவே தடுப்பூசி போடாத நபர்களை தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நபர்கள் சந்திக்க செல்வது, இல்லை கும்பலில் கலப்பது போன்ற செயல்கள் தற்போதைய நிலவரப்படி நிச்சயம் அபாயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, தடுப்பூசி போடப்படாத ஒருவரை சந்திக்க விரும்புவது அல்லது தவிர்ப்பது உங்கள் விருப்பம் மற்றும் தனிப்பட்ட அபாயங்களைப் பொறுத்தது. முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நபர் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் காரணியை கொண்டிருப்பின், முக்கிய சந்திப்புகளாக இருந்தாலும் அவற்றை ஒத்தி வைப்பது அல்லது virtual setting மூலம் மீட்டிங்கில் இணைவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

கட்டாயம் சந்திக்க நேர்ந்தால் :

வேறு வழியின்றி தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவர் தடுப்பூசி போட்டு கொள்ளாத ஒருவர் அல்லது பலரை நேரில் சந்திக்க நேரிட்டால் அபாயங்களை தவிரக்க பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடிக்கலாம்.

* முடிந்த அளவு இரட்டை மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். சர்ஜிக்கல் மற்றும் துணி மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் டபுள் மாஸ்க் போட்டு கொள்ளலாம். இது வாயைசுற்றி இறுக்கமாகப் பொருந்துவது மற்றும் மூக்கை சரியாக மூடுவதை உறுதி செய்கிறது.

* நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சானிடைசரை மறக்காமல் கூடவே எடுத்து செல்லுங்கள். அடிக்கடி கைகளை சானிடைஸ் செய்து கொள்ளுங்கள்.

* யாரை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்குவது, கட்டியணைப்பது உள்ளிட்ட செயலை தவிர்த்து போதுமான சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* நீங்கள் சந்திக்க போகும் நபருக்கு காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் அவரை சந்திப்பதை தவிர்ப்பதே நலம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus