முகப்பு /செய்தி /கொரோனா / டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையை ஏற்படுத்துமா? மத்திய அரசு சொல்வது என்ன?

டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையை ஏற்படுத்துமா? மத்திய அரசு சொல்வது என்ன?

2வது அலை பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் புதிய வைரஸ் பாதிப்பின் பரவல் 3வது அலைக்கு வித்திடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

2வது அலை பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் புதிய வைரஸ் பாதிப்பின் பரவல் 3வது அலைக்கு வித்திடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

2வது அலை பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் புதிய வைரஸ் பாதிப்பின் பரவல் 3வது அலைக்கு வித்திடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 2வது அலை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினசரி குறைந்து வரும் நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்படுள்ளது. டெல்டா வைரஸ் அல்லது டெல்டா பிளஸ் வேரியண்ட் என அழைக்கப்படும் இந்த வைரஸால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா வைரஸ் என்றால் என்ன? எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

டெல்டா வைரஸ் அல்லது AY.1 வேரியண்ட் வைரஸ் K417N திரிபு நிலை என அடையாளப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய 2ம் அலை வைரஸின் உருமாறிய வடிவமாக டெல்டா வைரஸ் உள்ளது. அறிவியல் பூர்வமாக இந்த வைரஸை B.1.617.2.1 அல்லது AY.1. என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து பேசிய சி.எஸ்.ஐ.ஆர் அறிவியலாளர் வினோத் ஸ்காரியா, சார்ஸ் கோவிட் 2வின் ஸ்பைக் புரதத்தில் பிறழ்வை சந்தித்து உருமாறியிருப்பதாகவும், இந்த உருமாறிய வைரஸ் ஐரோப்பாக்களில் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஜூன் 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்டா வைரஸ் ஏற்படுத்தும் அச்சம் என்ன?

டெல்டா வைரஸ் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இதற்கு முந்தைய வைரஸ்களை விட வேகமாக ஒருவரை தொற்றகூடிய அபாயம் டெல்டா பிளஸ் வேரியண்டிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. நேரடியாக நுரையீரல் செல்களை பாதித்து, மோனோகுளோனல் ஆன்டிபாடி ரெஸ்பான்ஸை வேகமாக குறைப்பதாக விளக்கியுள்ளது. தற்போதைய சூழலில் டெல்டா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட 9வது நாடு இந்தியா ஆகும். ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, போர்சுக்கல், சுவிஸ்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாள், சீனா மற்றும் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் வேகமாக பரவுகிறதா?

தொற்றுநோய்களை பொறுத்தவரை சுகாதார நிபுணர்கள், அது எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை நினைத்து முதலில் கவலைப்படுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் டெல்டா பிளஸ் வேரியண்ட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் எடுத்துக்கொள்ளாதவர்களிடம் இது ஏற்படுத்தப்போகும் பாதிப்பு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. இருப்பினும் நாட்டின் முன்னணி வைராலஜிஸ்ட் பேராசிரியர் சாகித் ஜமீல் பேசும்போது, டெல்டா பிளஸ் வேரியண்ட் வேகமாக பரவும் என்பதற்கான உறுதியான சான்றுகள் தற்போது வரை இல்லை எனக் கூறியுள்ளார்.

மோனோகுளோனல் தெரபியை தவிர்க்கும் டெல்டா பிளஸ் வேரியண்ட்

மிதமான அல்லது தீவிர கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு மோனோகுளோனல் சிகிச்சை அளிக்கப்படுபடுகிறது. மேலும், தீவிர தொற்றுக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை முன்கூட்டியே பரிந்துரைக்கப்படுகிறது. மோனோகுளோனல் ஆன்டிபாடி என்பவை ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜென்னை டார்கெட் செய்யும். சார்ஸ் கோவிட் 2 வைரஸின் ஸ்பைக் புரதங்களுடன் சேர்த்து ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் மோனோகுளோனல்கள், ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதை தடுக்கும். ஆனால், டெல்டா பிளஸ் வேரியண்ட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மோனோகுளோனல் சிகச்சை பலனளிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையை டெல்டா பிளஸ் வைரஸ் முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

டெல்டா பிளஸ் 3வது அலையை ஏற்படுத்துமா?

கொரோனா வைரஸின் முதல் அலை நிறைவடைந்தவுடன், பாதிப்பில் இருந்து மீண்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது உருமாறிய சார்ஸ் கோவிட் 2 வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் தொடங்கிய 2வது அலை இந்த ஆண்டு மத்தியில் பெரும் அலையாக உருவெடுத்தது. உருமாறிய வைரஸ் பரவல் மீது தொடக்கத்தில் முழு கவனம் செலுத்தாததால் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எரிவாயு மேடைகள் நிரம்பி வழிந்தன.

புதைக்க இடம் இல்லாமல் எரிவாயு மேடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தங்களின் குடும்ப உறுப்பினர்களின் உடலை ஆறுகளில் தூக்கியெறிந்தனர். கிடைக்கும் இடங்களில் புதைத்தனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததால் படுக்கைகள் இல்லாமல் சாலைகளிலும், ஆம்புலன்ஸூகளிலும் பல மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.

அந்தவகையில் தற்போது டெல்டா வைரஸ் பரவலானது மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பேசும் நிபுணர்கள், டெல்டா பிளஸ் வேரியண்ட் 3வது அலையாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எளிதாக கடந்து செல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த அலையின்போது கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது டெல்டா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

3வது அலையை கட்டுப்படுத்துவது எப்படி?

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் சேர்த்து இதுவரை 22 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகள் 3 அலைக்கு வித்திடும் என்பதால், அந்த மாநில தலைமைச் செயலாளர்களை தொடர்பு கொண்ட மத்திய அரசு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் உடனடியாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு, அடுத்த பகுதிகளுக்கு பரவாமல் தடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கூடும் இடங்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கூறியுள்ள மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், டெல்டா பிளஸ் வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு அம்மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19