Home /News /coronavirus-latest-news /

Hypoxia | கொரோனா பாதித்தால் ஆக்சிஜன் அளவு ஏன் குறைகிறது? மருத்துவ ஆய்வுகள் கூறுவது என்ன?

Hypoxia | கொரோனா பாதித்தால் ஆக்சிஜன் அளவு ஏன் குறைகிறது? மருத்துவ ஆய்வுகள் கூறுவது என்ன?

பல்ஸ் ஆக்சிமீட்டர்

பல்ஸ் ஆக்சிமீட்டர்

கொரோனா வைரஸ் பாதித்தால் ஆக்சிஜன் அளவு ஏன் குறைகிறது? என்பது சாதாரண மனிதர்கள் முதல் பாதித்தோர் மற்றும் மருத்துவ உலகிற்குமே ஒரு புரியாத புதிர்தான். காரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் அதற்குரிய சிகிச்சை எது என்பதில் விவாதங்கள் இருந்து வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கொரோனாவின் முதல் அலையில் சொல்லப்பட்ட நோய் அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை சாதாரண ஃப்ளூ காய்ச்சலுக்கும் பொருந்தக் கூடியதே. இது சீரியசான நிலையில் நிமோனியா, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

அதன் பிறகு இப்போது கொரோனா நுரையீரலில் நேரடியாக நுழைந்து விடுவதும், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, அதனால்தான் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட்டில் சில சந்தர்ப்பங்களில் கொரோனா இருப்பது தெரியாமல் நெகெட்டிவ் என்று வருகிறது, ஆனால் சி.டி.ஸ்கேனில் கோவிட் நிமோனியா பலருக்கு உறுதியாகியுள்ளது.

மேலும் நுரையீரல் அல்லாமல் இரைப்பை-குடல் பாதையையும் இந்த புதிய கொரோனா ஸ்ட்ரெய்ன் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், இதனால்தான் பசியின்மை, உணவைப்பார்த்தாலே குமட்டல், வயிற்றுப் போக்கு, கொஞ்சம் சீரியஸான கேஸ்களில் ரத்தத்தை முறித்து வயிற்றுப்போக்காகப் போகும் நிலை ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால்தன் புதிய நோய் அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, குமட்டல், பசியின்மை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சிறு சிறு ரத்தக்குழாய்களில் ரத்தக் கட்டு ஏற்படுவதும் உருவாகியுள்ளது. இப்போது இந்தியாவில் இரண்டாம் அலையின் பிரதான நோய் அறிகுறி என்னவெனில் ஆக்சிஜன் அளவு குறைவது, மூச்சுத்திணறல் ஆகியவையாகும். இது ஏன் என்று மருத்துவ ஆய்வாளர்களை திகைப்படைய வைத்துள்ளது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது Hypoxia என்று அழைக்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைந்தாலும் நோயாளிகள் மிகவும் இயல்பாகவே இருப்பார்கள் அதனால்தான் இதற்கு Happy Hypoxia என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவுக் குறையக் காரணமென்ன?

ஆரோக்கியமான நபர்களில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95% என்பது இயல்பானது. ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கு 40% வரை குறைந்து பெரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் அளவு குறைந்தால் அது கிட்னி, மூளை, இருதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்படைவதற்கான எச்சரிக்கையாகும்.

நுரையீரலில் உள்ள சிறிய ரத்தக்குழாய்களின் சிக்கல் நிறைந்த ஒரு வலைப்பின்னலில் பரவலான ரத்தக்கட்டு ஏற்படுவதே கொரோனா பாதித்தால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கான பிரதான காரணம் என்று பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இதற்கு அடியில் உள்ள காரணம் என்னவெனில் நம் உடலில் இருக்கும் அழற்சி எதிர்வினைதான் ( inflammatory reaction). இந்த நிலை ஏற்பட SARS-CoV-2 நோய்த்தொற்றும் இதற்கு அடுத்தக்கட்டமான கொரோனா வைரஸ் பாதிப்பும்தான். இது செல்களின் புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டி விட ரத்தக்கட்டுகளைப் பரவலாக ஏற்படுகிறது. இந்த ரத்தக்கட்டுகளினால் நுரையீரலில் உள்ள திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போய் விடுகிறது.

பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற சிறு உபகரணம் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவைக் காட்டுகிறது. விரலில் இந்த மீட்டரைச் சொருகிப்பார்த்தால் ஆக்சிஜன் அளவையும் இருதயத் துடிப்பு அளவையும் காட்டி விடும்.

கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவதைக் கண்டுப்பிடிப்பது எப்படி?

மிதமான கொரோனா அறிகுறிகளான இருமல், தொண்டைக் கட்டு, காய்ச்சல், தலைவலி ஆகியவை உள்ளது ஆனால் மூச்சுத்திணறல் இல்லை என்றாலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உதடுகளின் நிறம் இயற்கையான நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும் என்றும் உடல் சருமத்தின் நிறமும் இளம் சிகப்பு அல்லது சிகப்பு கலந்த ஊதா நிறமாக மாறும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவதும் ஆக்சிஜன் அளவு குறைந்ததற்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடித்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் கூறும் நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் கோவிட்-19 ஆபத்திலிருந்து மீண்டு விடலாம்.
Published by:Muthukumar
First published:

Tags: Corona impact, COVID-19 Second Wave, Oxygen

அடுத்த செய்தி