Home /News /coronavirus-latest-news /

மற்ற தொழில்கள் கைவிட்டதால் முகக் கவச விற்பனையில் இறங்கிய மக்களின் வாழ்க்கை எப்படி நகருகிறது?

மற்ற தொழில்கள் கைவிட்டதால் முகக் கவச விற்பனையில் இறங்கிய மக்களின் வாழ்க்கை எப்படி நகருகிறது?

முகக்கவசம் விற்கும் ஆட்டோ ஓட்டுநர்.

முகக்கவசம் விற்கும் ஆட்டோ ஓட்டுநர்.

"பத்து ரூபா, இருபது ரூபா.. மாஸ்க் வேணுமா மாஸ்க்..." திரும்பும் திசையெங்கும் இப்போது ஒலிக்கும் குரல்கள் இவை தாம். இந்த திடீர் வியாபாரத்திற்கு கடைவிரித்தவர்களுக்கு கைகொடுத்துள்ளதா முகக் கவசங்கள்?

முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள் என செல்போனில் விழிப்புணர்வு வழங்கப்படத் தொடங்கிய நாள்முதல் மாஸ்க் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தொடக்கத்தில் மருந்துக் கடைகளில் இருபது ரூபாய் கொடுத்து மாஸ்க் வாங்கினோம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மழையில் முளைத்த காளான்களாய் சாலைகளில் முளைக்கத் தொடங்கின மாஸ்க் கடைகள். ஏராளமான வண்ணங்களில், வடிவங்களில் முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்தன.

அப்போதெல்லாம் குறைந்தது 20 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கவில்லை. அவை அனைத்துமே பெரும்பாலும் துணியால் செய்யப்பட்டவை. அந்த நாட்களில் தினசரி 100 மாஸ்க்குகள் வரை விற்பனை நடைபெற்றதாகவும், இப்போது 20 முதல் 30 மாஸ்க் மட்டுமே விற்க முடிவதாகவும் கூறுகின்றனர் வியாபாரிகள்.



பேன்சி கடை நடத்தியவர்கள், ஆட்டோ டிரைவர்கள், கட்டட வேலைக்குச் சென்றவர்கள், கால்டாக்சி ட்ரைவர்கள் எனப் பலரும் தங்கள் தொழிலை மறந்து மாஸ்க் விற்பனைக்கு மாறிவிட்டனர். வயிற்றுப் பிழைப்பிற்கு வழியில்லாதபோது மாற்று வழியைத் தேர்வு செய்வதே ஒரே வழி என்கின்றனர் இந்த திடீர் வியாபாரிகள்.

Also read: அவசரமாக சிகிச்சைக்குச் செல்ல இ-பாஸ் இல்லாமல் திணறிய குடும்பம் - நள்ளிரவில் துரிதமாகச் செயல்பட்ட சென்னை மாநகராட்சி

இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட மாஸ்க் கிடைக்கிறது. வசதியுள்ளவர்கள் தரமான N95, ஒரு முறை பயன்படுத்தப்படும் சர்ஜிகல் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரும்பாலும் இந்த சாலை ஓரத்தில் கிடைக்கும் துணி மாஸ்க்குகளையே வாங்குகின்றனர். துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற காரணத்தால் இதைத் தேடி வருவதாகக் கூறுகின்றனர் வியாபாரிகள். துவைத்து பயன்படுத்தப்படுவதால் ஒருமுறை வாங்கியவர்கள் மீண்டும் வாங்குவதில்லை என்பதால் வியாபாரம் குறைந்து போனதாகவும் சொல்கின்றனர்.

இருந்தாலும் பரவாயில்லை வேலை இல்லாமல் வீட்டில் இருந்தால் சோற்றுக்கு வழி இல்லை என்பதால் ஏதோ நாளொன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதுவே இப்போதைக்கு இவர்களின் வாழ்வாதாரம் என்பது வேதனையிலும் ஆறுதலான செய்தியாக உள்ளது.
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி