• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா ஆபத்து: குழந்தைகளுக்கான தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் நிபுணர்கள்!

கொரோனா ஆபத்து: குழந்தைகளுக்கான தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் நிபுணர்கள்!

தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் சதவீதமும், இறப்பு சதவீதமும் மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு

  • Share this:
கொரோனா வைரஸின் அடுத்த அலை குழந்தைகளை பாதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலை முதியோர்களை அதிகம் பாதித்த நிலையில், இரண்டாம் அலை இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரை அதிகளவு பாதித்துள்ளது. குழந்தைகளும் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் சதவீதமும், இறப்பு சதவீதமும் மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு. இதனைக் கருத்தில் கொண்ட உலக நாடுகள் 12 முதல் 15 வயதினருக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை போர்கால அடிப்படையில் செய்து வருகின்றன. சில நாடுகள் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன.

21ஆம் நூற்றாண்டின் மனித இனத்துக்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே சர்வயோக நிவாரணியாக இருக்கிறது. ஆனால், அவை அனைத்து நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதில் பெரும் வித்தியாசம் நிலவுகிறது. வளர்ந்த நாடுகளுக்கு கிடைக்கும் தடுப்பூசியை ஒப்பிடும்போது வளரும் மற்றும் ஏழ்மை நாடுகளில் மிகப்பெரிய தட்டுப்பாடு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழ்மை நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் தடுப்பூசி கூட கிடைக்காத நாடுகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்மையில் உலக சுகாதார மையம் மற்றும் PMNCH உள்ளிட்ட உலகளவில் இருக்கும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ‘Lives in the Balance’ என்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். இதில் ஐ.நா. சமூக பிரதிநிதிகள், குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோவிட் வைரஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள், பதின்பருவத்தினர் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை விரைவாக மீட்பது குறித்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய சரிசமமான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஏழ்மை நாடுகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தடுப்பூசியை விரைவாக செலுத்துவது குறித்தும், அதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

விளிம்பு நிலை மற்றும் சராசரி வாழ்க்கை தரத்துக்கு கீழே இருக்கும் மக்களின் நிலை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகவும் கவலையளிக்கக்கூடியதாக மாறியிருப்பதாக Gavi அமைப்பின் இணை நிர்வாக அதிகாரி அனுராதா குப்தா கூறியுள்ளார். சுகாதார ரீதியாக பார்க்கும்போது அவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும், உரிய மருத்துவம் மற்றும் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு கிடைப்பதுபோல், அவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார். அந்தவகையில், பெண்கள், குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு தடுப்பூசி சமமாக கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அனுராதா குப்தா கூறினார்.

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், PMNCH தலைவருமான ஹெலன் கிளார்க் பேசும்போது, கோவிட் வைரஸால் சமூக சமத்துவமின்மை மிகப்பெரிய அளவில்  உருவாகியிருப்பதாகவும், அவை பாலினம், வருமானம், புவியல் அமைப்பு மற்றும் பல்வேறு காரணிகளிலும் எதிரொலிப்பதை பார்க்க முடிவதாக கூறியுள்ளார். வைரஸை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் சமத்துவமின்மையை சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் உலக நாடுகளுக்கு இருப்பதாக கூறியுள்ளார். அந்தவகையில், இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும், சுகாதார கட்டமைப்புக்கான நிதியை அதிகரித்து குழந்தைகள், பெண்கள் மற்றும் இளம் வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: