• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பெருந்தொற்று கால நாயகர்கள் - கொரோனா பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள்

பெருந்தொற்று கால நாயகர்கள் - கொரோனா பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள்

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 9,984 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 9,984 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்கே யாரும் நேரடியாக உதவி செய்ய முடியாத நிலையில், தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் தன்னார்வலர்கள் சிலர். 

  • Share this:
கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உறவினர்கள் கூட கொரோனா அச்சத்தால் உடலை அடக்கம் செய்ய முன்வருவதில்லை. இதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களை அடக்கம் செய்வதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன், அவர்களின் மத வழக்கப்படி அடக்கம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா’ சார்பில் தன்னார்வலர்கள் குழு அமைத்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இதுவரை சென்னையில் 32 உடல்களை இவர்கள் அடக்கம் செய்துள்ளனர். சென்னை முழுவதும் பகுதி வாரியாக 18 குழுக்கள் அமைத்து, ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 10 நபர்கள் என 120 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் அடக்கம் செய்ய பணம் தரமுடியவில்லை என்றாலும், இவர்களே அதற்கான செலவையும் ஏற்றுக்கொண்டு உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த இவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்ட போது இந்த சேவையில் ஈடுபடத்துவங்கினர். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட வண்ணாரப்பேட்டையில் அதிகமான உடல்களை அடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர் இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வர்லகள்.

இதுகுறித்து உடல் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பாப்புலர் பிரண்ட் தென் சென்னை மாவட்ட செயலாளர் மொய்தீன் அன்சாரி கூறுகையில்,”நாளை எந்த உடல்களும் அடக்கத்திற்கு வரக்கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனை. இருப்பினும், கடந்த சில தினங்களாக அதிகமானோர் உயிரிழப்பதால், மருத்துவமனைகளில் உடல்களை சரியாக ”பேக்” செய்யாமல் கை, கால் தெரியும் படி கொடுக்கப்படுகிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருகிறது. இதை மருத்துவமனை சரி செய்ய வேண்டும்.

Also see... புதுச்சேரியில் கொரோனா பாதித்து ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த நபர்

எங்கள் குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் கடந்து தான் இச்சேவையில் ஈடுபட்டுள்ளோம். மேலும், எங்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், உடல் பாதுகாப்பு உடைகள், இப்பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட காரியங்களை செய்து தர அரசு முன்வர வேண்டும்,” என்றார்.

இவர்கள் யாரும் இதற்கு முன்னர் உடல் அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் அல்ல. இருப்பினும், எப்படியாவது பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள். இவர்கள் பெருந்தொற்று காலத்தின் நாயகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: