வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 738 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் நாள் முழுக்க செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மளிகைக் கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வீடுகளுக்கே காய்கறிகளை கொண்டு சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். எனவே குறிப்பிட்ட இந்த 3 நாட்களில் மட்டும் மக்கள் கடைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை இறைச்சிக்கடைகளை திறக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.