வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் உள்ள நடுப்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான ராமமூர்த்தி ஆச்சாரிக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 3-ம் தேதி சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், அவருக்கு திங்கட்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், மூச்சுத்திணறல் அதிகரித்தது. அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். விஷாரம் அருகே சென்றபோது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ராமமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராமமூர்த்தியின் உடல், அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். மதியம் 3 மணிக்கு இறுதிஊர்வலத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
படிக்க:
கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்
படிக்க:
குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்
இந்நிலையில், ராமமூர்த்தியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அடுக்கம்பாறை மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கு கொரோனா இருப்பதாகவும், மருத்துவமனைக்கு அழைத்து வருமாறும் தெரிவித்தனர்.
இந்தத் தகவலைக் கேட்டு, இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அஞ்சலி செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கும் கொரோனா இருக்குமோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், ராமமூர்த்தியின் உடலை காவல் துறையினர் எடுத்துச் சென்றனர். கொரோனா அறிகுறிகள் இருந்தும், மருத்துவமனையில் அனுமதிக்காமல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் அலட்சியத்துடன் திருப்பி அனுப்பியதால், முதியவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.