கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை பல்வேறு நாடுகள் தளர்த்த தொடங்கியுள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 7 வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சாலைகளில் வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளதோடு, ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனினும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் திரையரங்குகளை திறப்பதற்கான தடை தொடர்கிறது. குழு விளையாட்டுகளுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கான முழுக்கவனம் செலுத்தப்படும் என்றும், ஒரே ஒரு மாணவன் பாதிக்கப்பட்டால் கூட அந்த வகுப்பறை மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தென்கொரிய கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
இதேபோல் இத்தாலியிலும் 60 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தாலி கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்த முதல் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள், பாதிப்பு தொடர்வதை பொறுத்து மாறும் என்றும், தற்போதைய தளர்வுகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான சிக்னலாக கருதிவிடக் கூடாது என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முகக்கவசம் விற்பனை மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இதற்காக 60 லட்சம் முகக்கவசங்கள் கைவசம் உள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவுடன், முடி திருத்தகங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.