Home » News » Coronavirus-latest-news » VACCINE IS FREE FOR CORONA WORKERS UNION MINISTER HARSHAVARDHAN VJR

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன்

நாடு முழுவதும் முதல்கட்டமாக ஒரு கோடி முன்கள பணியாளர்கள் உட்பட மூன்று கோடி நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன்
மாதிரி படம்
  • Share this:
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஓரிரு வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் போது வரும் இடர்பாடுகளை களையும் விதமாக நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்குச்சாவடி மையங்களை போன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. கோவின் செயலி மூலம் பதிவு செய்த தன்னார்வலர்களின் அடையாளங்களை சரிபார்த்த பிறகு தடுப்பூசி செலுத்தும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருப்பு அறையில் இருந்து தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு தன்னார்வலர்களை அழைத்து செல்வது, தடுப்பூசி செலுத்திய பிறகு சிறிது நேரம் கண்காணிப்பில் வைப்பது போன்று ஒத்திகை பார்க்கப்பட்டது.


டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையினை பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன், தடுப்பூசி சேமித்து வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.vபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என தெரிவித்தார். தடுப்பூசி குறித்த வதந்திகளில் மக்கள் கவனம் செலுத்தக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்ஸவர்த்தன், நாடு முழுவதும் முதல்கட்டமாக ஒரு கோடி முன்கள பணியாளர்கள் உட்பட மூன்று கோடி நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூலை மாதத்திற்குள் 27 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கர்நாடகாவில் 5 மாவட்டங்களில் காலை 9 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி ஒத்திகை 2 மணி நேரம் நீடித்தது.தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி செலுத்துவதற்காக முதலில் 6 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், 2 மணி நேரத்தில் 25 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியுமா என்பது குறித்து ஒத்திகை நடைபெற்றதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் இரு முறை தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். தடுப்பூசி போடப்படும் ஓரிரு இடங்களில் இடப்பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 3, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading