டிரோன்கள் மூலம் தடுப்பூசி விநியோகம் -ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி!

டிரோன்கள் மூலம் தடுப்பூசி விநியோகம் -ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி!

காட்சிப் படம்

டிரோன்கள் மூலம் தடுப்பூசி விநியோகிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துக்கு (ICMR) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால், துரிதமாக அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி கொண்டு செல்வது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறது. மலைப்பிரதேசம் மற்றும் இக்கட்டான பகுதிகளுக்கு தடுப்பூசிகளை தடையின்றி கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஐஐடி கான்பூருடன் இணைந்து இந்த ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ள உள்ளது. ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இந்த அனுமதி அமலில் இருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்தியா விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் (DGCA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், ஐஐடி கான்பூருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. டிரோன்களை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே சில திட்டங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நாகர் நிகாம், ஹால்ட்வானி, ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகளில் அசையா சொத்துகளின் தகவல்களை சேகரிக்க டிரோன்களை பயன்படுத்த சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய ரயில்வேத்துறையில் கோடா மற்றும் காடினி பகுதிகளில் ரயில் விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை டிரோன்கள் மூலம் அடையாளம் காணவும், உதவிகளை வழங்கவும் அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, தனியார் துறையில் நிபந்தனைகளுடன் வேதாந்தா நிறுவனத்துக்கு டிரோன்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8, 2022 ஆம் ஆண்டு வரை கனிம வளங்களை ஆய்வு செய்து, அது தொடர்பான தகவல்களை சேகரிக்க அந்த நிறுவனத்துக்கு சிறப்பு அனுமதியுடன் டிரோன்களை பயன்படுத்தலாம் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த சிறப்பு அனுமதி அல்லது டிரோன்கள் பயன்படுத்துவதில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள அனுமதி நிபந்தனைகளுடன் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டால் அந்த சிறப்பு அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

 
Published by:Ramprasath H
First published: