45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் அதாவது வருகிற 25ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. நேற்று தொடங்கியுள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை மேற்பார்வையிட்டு செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே தாங்களாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பலர் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். வருகிற 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் உறுதி எடுத்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சத்தை போக்குவதற்காக கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்ள இருக்றோம்” என்று கூறினார்.
Must Read : கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41,72,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 14,11,194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 13,93,811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.